பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தோஷகானா வழக்கில் சிறையில் இருந்து வரும் நிலையில், அரசு ரகசியங்களை கசிய விட்டதாகத் தொடரப்பட்ட சைபர் வழக்கிலும், அவர் குற்றவாளி என்று நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்திருக்கிறது. இதன் மூலம் இம்ரான் கானுக்கு சிக்கலுக்கு மேல் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.
2018 முதல் 2022 வரை பாகிஸ்தான் நாட்டின் பிரதமராக இருந்தவர் இம்ரான் கான். பிரபல கிரிக்கெட் வீரரான இவர், ஓய்வுக்குப் பிறகு பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியைத் தொடங்கினார். இக்கட்சி 2018 நாடாளுமன்றத் தேர்தலில் அதிக இடங்களில் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, சில கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சியைக் கைப்பற்றினார். ஆனால், இவரது ஆட்சியில் பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடிகளைச் சந்தித்தது. இதனால், அந்நாட்டு மக்கள் இம்ரான் கான் அரசு மீது கடும் அதிருப்தியடைந்தனர்.
இதையடுத்து, இம்ரான் கானின் கூட்டணியில் இருந்த முக்கியக் கட்சி வெளியேறி, எதிர்கட்சியுடன் கூட்டணி அமைத்தது. இதனால், நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்து இம்ரான் கான் அரசு கவிழ்ந்தது. இதன் பிறகு எதிர்கட்சி ஆட்சி அமைத்த நிலையில், இம்ரான் கான் மீது மோசடி, ஊழல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில், தோஷகானா எனப்படும், அரசுக்குச் சொந்தமான விலை உயர்ந்த பொருட்களை விற்று பண மோசடி செய்த வழக்கில், இம்ரான் கானுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, இம்ரான் கான் தற்போது சிறையில் தண்டனையை கழித்து வருகிறார். இதனிடையே, சிறையில் இருந்த இம்ரான் மீது அரசு ரகசியங்களை கசிய விட்டதாக, சைபர் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதாவது, கடந்த 2022-ம் ஆண்டு இம்ரான் கான் அரசு கவிழும் சூழல் ஏற்பட்டது. அப்போது, கட்சியின் பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இம்ரான், தனது அரசை கவிழ்க்க சதி நடப்பதாகவும், இந்த சதிக்குப் பின்னால் அமெரிக்கா இருப்பதாகவும் கூறியதோடு, அதற்கான ஆதாரமாக அரசின் ரகசியக் கடிதம் ஒன்றையும் காட்டினார்.
இந்த விவகாரம் தொடர்பாக, இம்ரான் கான் மீது அந்நாட்டின் மத்திய புலனாய்வுத்துறை சைபர் வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கு பாகிஸ்தான் நாட்டின் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில்தான் இம்ரான் கான் மற்றும் அவரது நெருங்கிய உதவியாளரும், முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சருமான ஷா மெஹ்மூத் குரேஷி ஆகியோர் குற்றவாளிகள் என்று சிறப்பு நீதிமன்றம் அதிரடியாகத் தீர்ப்புக் கூறியிருக்கிறது. இதனால், இம்ரான் கானுக்கு சிக்கல் மேல் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.