சந்திர கிரகணம் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவில் 8 மணி நேரம் மூடப்படும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான கோவில், சந்திர மற்றும் சூரிய கிரகணக் காலங்களில் மூடப்படுவது வழக்கம். கிரகணம் முடிந்த பின் வைகானச ஆகம விதிப்படி, சுத்தி செய்து ஆடைகள் அணிவித்து ஏழுமலையானுக்குப் புண்ணியா வசனம் செய்து, பின்னர் கோவில் நடை திறக்கப்படும்.
வருகிற அக்டோபர் 29-ந் தேதி அதிகாலை 1.05 மணி முதல் 2.22 மணி வரை, சந்திரக் கிரகணம் ஏற்பட உள்ளது. கிரகணக் காலத்துக்கு 6 மணி நேரத்துக்கு முன்பு கோவில் மூடப்படுவது வழக்கம்.
எனவே, அக்டோபர் 28-ந் தேதி இரவு 7.05 மணிக்கு ஏகாந்தத்தில் சுத்தி மற்றும் சுப்ரபாத சேவை செய்த பிறகு, அதிகாலை 3.15 மணிக்குக் கோவில் கதவுகள் திறக்கப்படும். சந்திரக் கிரகணம் காரணமாக, கோவில் 8 மணி நேரம் மூடப்பட்டிருக்கும்.
இதன் காரணமாக, சகஸ்ர தீபாலங்காரச் சேவை, மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் இதை கவனத்தில் கொண்டு அதற்கேற்ப தங்கள் யாத்திரையைத் திட்டமிடுமாறு தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது.