காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, மகாத்மா காந்தியின் திருவுருவப் படத்திற்கு, ஆளுநர் ஆர்.என். ரவி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
மகாத்மா காந்தியின் 155-வது பிறந்த நாள், நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, ராஜ்காட்டிலுள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். மேலும், பிரதமர் நரேந்திர மோடியும் மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தினார்.
இந்நிலையில், மகாத்மா காந்தியின் பிறந்த நாளையொட்டி சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்துக்கு, ஆளுநர் ஆர்.என்.ரவி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
மேலும், அங்கு மகாத்மா காந்தியின் புகழைப் போற்றி பாடும் பஜனை பாடல்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் ஆண்கள், பெண்கள் மற்றும் பள்ளி மாணவிகளைக் கொண்ட பஜனை குழுவினர் பங்கேற்று மகாத்மா காந்தியின் புகழைப் போற்றும் வகையில் பஜனை பாடல்களைப் பாடினார்கள். இதனை ஆளுநர் ஆர்.என். ரவி கேட்டு ரசித்தார்.