சம வேலைக்குச் சம ஊதியம் வழங்கிடக் கோரி, இடைநிலை ஆசிரியர்கள் 5-வது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பள்ளி கல்வித்துறை, தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றக் கூடிய இடைநிலை ஆசிரியர்களுக்கு, 2009 மே மாதத்திற்கு முன்னால் பணியில் சேர்ந்தவர்களுக்கு ஒரு ஊதியமும், அதற்கு பின்னால் பணியில் சேர்ந்தவர்களுக்கு மற்றொரு ஊதியமும் வழங்கப்படுகிறது.
இதனை அடுத்து, சம வேலை செய்யும் எங்களுக்குச் சம ஊதியம் கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, கடந்த 28-ஆம் தேதி சென்னை நுங்கம்பாக்கத்தில், இடைநிலை ஆசிரியர்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 5-வது நாளாக இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது.
போராட்டக் களத்தில் இருக்கிற ஆசிரியர்களில் பல ஆசிரியர்களுக்கு உடல் நலப் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இதனால், 150-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஆம்புலம்ஸ்கள் மூலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், உடல்நிலைக் குறைவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், போராட்டக் கலத்திலேயே சிகிச்சையானது அளிக்கப்பட்டு வருகின்றது.
இதனைத் தொடர்ந்து அரசு தரப்பில் போராட்டத்தில் ஈடுபட்ட சங்க நிர்வாகிகளோடு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் அதில் எந்த உடன்பாடும் இல்லை என்று ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து சங்க பொதுச்செயலாளர் ராபர்ட் கூறுகையில், இது இன்று நேற்று என்று உருவான பிரச்னை அல்ல, 14 ஆண்டுகளாக நடைபெறும் ஒரு பிரச்சனை. கடந்த 2018 ஆம் ஆண்டு மு.க ஸ்டாலின் அவர்கள் இதே களத்திற்கு வந்து சம வேலைக்குச் சம ஊதியம் நாங்கள் ஆட்சிக்கு வந்த உடனே வழங்கப்படும் என்று அறிவித்து இருந்தார். இவர்கள் ஆட்சிக்கு வந்தால் இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று நாங்கள் எதிர்ப்பார்த்துக் காத்திருந்தோம் . ஆனால் 20 மாதங்கள் ஆகியும் எதுவும் நடக்காததால் கடந்த டிசம்பர் மாதம் நாங்கள் போராட்டத்தைத் தொடங்கினோம்.
இந்த ஆண்டின் முதல் நாள் முதல் அறிவிப்பே இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய முரண் பிரச்சனை தொடர்பான அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றார். ஆனால் 3 மாதங்களில் முடியும் என்று கூறியது இப்பொழுது 10 மாதங்கள் ஆகியும் எங்களுக்கு எந்த ஒரு அறிவிப்பும் எட்டப்படவில்லை. மீண்டும் எங்களுக்கு இன்று நடந்த பேச்சு வார்த்தையில் எங்களுக்குக் கால அவகாசம் தேவை என்று அறிவித்தார்கள்.
அதற்கு எங்கள் தரப்பிலிருந்து கூறப்பட்டது என்னவென்றால் நாங்கள் கால அவகாசம் கொடுப்பதற்குத் தாயாராக இருக்கிறோம். ஆனால் எந்த தேதியிலிருந்து எங்களுக்குச் சம வேலைக்குச் சம ஊதியம் வழங்கப்படும் என்ற தேதியை அறிக்கையாக வெளியிட்டால் நாங்கள் எங்கள் போராட்டத்தைக் கலைத்துக் கொள்கிறோம்.
மேலும் எண்ணும் எழுத்தும் திட்டத்தைச் சரியாக கற்பிப்பது நீங்கள் தான் என்று எங்களைப் பாராட்டினார்கள். எனவே உடனடியாக பணிக்குத் திரும்ப வேண்டும் என்று கூறினார்கள். நாங்களும், எப்பொழுது வேண்டுமானாலும் பணிக்குத் திரும்பத் தயார், எங்கள் கோரிக்கையை எப்பொழுது நிறைவேற்றப்படும் என்ற அறிக்கையை மட்டும் முதல்வர் தாக்கல் செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.