ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் அக்டோபர் ஐந்தாம் தேதி முதல் தொடங்குகிறது. இதற்கான பயிற்சி ஆட்டம் தற்போது நடைபெற்று வருகிறது.
மழையால் பெரும்பாலான பயிற்சி ஆட்டங்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் இந்த உலகக்கோப்பை குறித்து கௌதம் கம்பீர் ஒரு முக்கியமான கருத்தை கூறியிருக்கிறார்.
இது குறித்து பேசிய அவர் ரோகித் சர்மா தொடக்க வீரராக சிறப்பான பணியை செய்து இருக்கிறார். தற்போது உலகக்கோப்பை இந்தியாவில் தான் நடைபெறுகிறது. ரோகித் சர்மாவிடம் இருக்கும் திறமை குறித்து நமக்கு தெரியும்.
ரோஹித் சர்மா சொந்த மண்ணில் எத்தகைய சாதனை படைத்திருக்கிறார் என்றும் நமக்கு தெரியும் அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் மூன்று இரட்டை சதம் அடித்திருக்கிறார். இந்த உலகக் கோப்பையை ரோகித் சர்மா மிகுந்த எதிர்பார்ப்புடன் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருப்பார். இந்தியாவுக்காக ஒரு திருப்புமுனை ஆட்டத்தை நிச்சயமாக ரோகித் சர்மா வெளிப்படுத்துவார்.
இதேபோல் பாபர் அசாமும் சாதாரண வீரர் கிடையாது. அவரிடம் இருக்கும் கிரிக்கெட் வித்தையை பார்க்கும் போது நிச்சயமாக இந்த உலகக் கோப்பையில் அவர் மூன்று அல்லது நான்கு சதம் பாகிஸ்தான் அணிக்காக விளாசுவார். இந்த உலகக் கோப்பையில் பாபர் அசாமின் ஆட்டம் கவனிக்கத்தக்க வகையில் இருக்கும் என்று கம்பீர் அறிவுறுத்தியுள்ளார்.
ஏற்கனவே பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்துக்கு எதிராக பாபர் அசாம் 84 பந்துகளை எதிர் கொண்டு 80 ரன்கள் விளாசி இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது பாகிஸ்தான் அணி நாளை ஆஸ்திரேலியாவை பயிற்சி ஆட்டத்தில் எதிர்கொள்கிறது. இந்திய அணி நாளை நெதர்லாந்தை எதிர்கொள்ள உள்ளது.