விமானிகள் மற்றும் விமான பணிப்பெண்கள் வாசனை திரவியங்களை பயன்படுத்துவதை தடை செய்வது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறையை மேற்பார்வையிடும் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநர் ஜெனரல் (டி.ஜி.சி.ஏ.) அலுவலகம், மது அருந்துதல் தொடர்பான சட்ட விதிகளுக்கு சமீபத்தில் ஒரு புதுப்பிப்பை முன்மொழிந்தது. இந்த முன்மொழியப்பட்ட தடையில் மதுபானங்கள் தவிர வாசனை திரவியம் போன்ற மற்ற பொருட்களும் அடங்கும். வழிகாட்டுதல்களில், நேர்மறையான சுவாசப் பரிசோதனையை ஏற்படுத்தக் கூடிய மதுபானங்களைத் தவிர, மற்ற விஷயங்களைப் பற்றி ஏற்கெனவே குறிப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.
அந்த வழிகாட்டுதலில், “எந்தவொரு விமானியும், விமானப் பணிப்பெண்களும் மவுத்வாஷ், டூத் ஜெல், பெர்ஃப்யூம் அல்லது ஆல்கஹால் உள்ளிட்ட்ட எந்தவொரு பொருளையும் பயன்படுத்தக்கூடாது. மேலும், மேற்கண்டவற்றை உட்கொண்டால், பறக்கும் பணியை மேற்கொள்வதற்கு முன்பு நிறுவனத்தின் மருத்துவரை அணுக வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
புதிய வழிகாட்டுதல்கள் புதுப்பிப்பில் விமானிகள் மற்றும் விமான பணிப்பெண்களுக்கு வாசனை திரவியம் தடை செய்யப்பட்டுள்ளது. வாசனை திரவியத்தின் மீதான வருங்கால தடை பரிசீலிக்கப்பட்டு வருகிறது. ஏனெனில், பல வாசனை திரவியங்களில் ஆல்கஹால் அடங்கும். இது தவறான மற்றும் நேர்மறையான ப்ரீத் அலைசர் சோதனை முடிவை உருவாக்கும்.
டி.ஜி.சி.ஏ.வுக்கான அதிகாரப்பூர்வ விமானப் பாதுகாப்புத் தேவைகள் ஆகஸ்ட் 2015-ல் அங்கீகரிக்கப்பட்டது. இதன்படி, மிகச்சிறிய அளவு மது அருந்தினாலும் 3 மாதத்திற்கு சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள். சோதனை முடிவுகளை கண்காணிக்கும் விமானப் போக்குவரத்து தளத்தின்படி, 2022-ம் ஆண்டில் மட்டும் 41 இந்திய விமானிகள் மற்றும் 116 கேபின் குழு உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.