வண்டலூர் உயிரியல் பூங்காவில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு பேருந்துகளில் சென்று சிங்கங்களைப் பார்க்கும் வசதி மீண்டும் தொடங்கப்பட்டது.
வண்டலூர் உயிரியல் பூங்காவில் சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட விலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதனைக் காண, தமிழ்நாடு மட்டுமின்றி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.
கொரோனா ஊரடங்கின்போது கடந்த 3 ஆண்டுக்கு முன்பு பூங்காவில் சிங்கங்களை வாகனத்தில் சென்று பார்வையிடும் லயன்சபாரி நிறுத்தப்பட்டது. கொரோனா பெருந்தொற்று குறைந்த பிறகு பூங்கா திறக்கப்பட்டது. ஆனால், சிங்கங்களை வாகனத்தில் சென்று பார்வையிடும் வசதி மட்டும் ஏற்படுத்தப்படாமல் இருந்தது.
இதனால், சிங்கங்களைப் பார்வையிடும் லயன் சபாரியை மீண்டும் தொடங்க வேண்டும் என்று சுற்றுலாப் பயணிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். இதைத்தொடர்ந்து, லயன் சபாரியைத் தொடங்க பூங்கா அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். இதற்காகத் தனியார் நிறுவனங்களின் பங்களிப்புடன் ஒரே நேரத்தில் 28 பேர் பயணிக்கக் கூடிய குளிர் சாதனப் பேருந்துகள் வாங்கப்பட்டது. மேலும், சிங்கங்கள் உலாவும் பகுதிகள் நவீனப்படுத்தப்பட்டது.
இந்நிலையில், இன்று வண்டலூர் உயிரியல் பூங்காவில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு சிங்கங்களைப் பேருந்தில் சென்று பார்வையிடும் வசதி தொடங்கப்பட்டது. இதேபோல், மான்களை வாகனத்தில் சென்று பார்வையிடும் வசதியும் தொடங்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, சுற்றுலாப் பயணிகள் குளிர்சாதனப் பேருந்துகளில் சென்று சிங்கம் மற்றும் மான்களைப் பார்வையிட்டனர்.