பிரேசிலில் உள்ள டெஃப் ஏரியில் நூற்றுக்கணக்கான டால்பின்கள் அளவுக்கு அதிகமான வெப்பத்தின் காரணமாக, உயிரிழந்து மிதக்கின்றன.
அமேசான் மலைக்காடுகளானது பிரேசில் நாட்டின் வடமேற்கில் தொடங்கி கொலம்பியா உட்படப் பல தென் அமெரிக்க நாடுகள் வரை பரவியுள்ளது.
வடக்கு பிரேசிலில் அமேசோனாஸ் மாநிலத்தின் தலைநகரமான மனோஸ் நகருக்கு அருகே டெஃப் பிராந்தியம் அமைந்துள்ளது. சமீப காலமாக, இப்பகுதியிலுள்ள அச்சான் காடுகளில் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு நீர் நிலைகளில் வெப்பம் உயர்ந்துள்ளது. ஒரு சில இடங்களில் வெப்பம் 100 டிகிரி ஃபேரன்ஹீட் அளவைத் தாண்டியுள்ளது.
இதன் காரணமாக, இங்குள்ள டெஃப் ஏரியில் ஏராளமான மீன்கள் செத்து மிதக்கின்றன. குறிப்பாக, நூற்றுக்கணக்கான டால்பின்கள் அளவுக்கு அதிகமான வெப்பத்தின் காரணமாக, உயிரிழந்து மிதக்கின்றன.
இதுகுறித்து பிரேசில் அறிவியல் துறையின் ஆதரவில் இயங்கும் மமிரவா நிறுவனம் ஆய்வு செய்தது. ஆனால், வெப்பநிலை அதிகரிப்பதற்கான காரணத்தை இதுவரை கண்டறிய முடியவில்லை என்று தெரிவித்துள்ளது.
அதிகரித்து வரும் வெப்பநிலை காரணமாக அமேசான் காடுகளில் உள்ள நீர்மட்டமும் குறைந்து கொண்டே வருகிறது. பரப்பளவில் கிட்டத்தட்ட ஆஸ்திரேலியாவின் அளவிற்குப் பரந்து விரிந்துள்ளது. இந்நிலையில், இது போன்ற வானிலை நிகழ்வுகள் நடைபெறுவதால் அங்குள்ள ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
மனிதர்கள் இயற்கைக்கு எதிரான பல நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதால், இதுபோன்ற விசித்திரமான பருவநிலை மாற்றங்கள் ஏற்படலாம் எனச் சுற்றுச்சூழல் நிபுணர்கள் தொடர்ந்து எச்சரித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.