போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுடன் தமிழக அரசு சார்பில், நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைத் தோல்வியில் முடிந்துள்ளது.
சென்னை நுங்கம்பாக்கம் டி.பிஐ. வளாகத்தில் ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இடைநிலை ஆசிரியர்களுக்கு, 2009 மே மாதத்திற்கு முன்னால் பணியில் சேர்ந்தவர்களுக்கு ஒரு ஊதியமும், அதற்கு பின்னால் பணியில் சேர்ந்தவர்களுக்கு மற்றொரு ஊதியமும் வழங்கப்படுகிறது. இதனை அடுத்து, சம வேலை செய்யும் எங்களுக்குச் சம ஊதியம் கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, கடந்த 28-ஆம் தேதி முதல் சென்னை நுங்கம்பாக்கத்தில், இடைநிலை ஆசிரியர்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 6-வது நாளாக இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் பலருக்கு உடல் நலப் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இதனால், 150-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து, உடல்நிலைக் குறைவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், போராட்டம் செய்யும் இடத்திலேயே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தொடர் போராட்டம் நடத்தி வரும் ஆசிரியர் சங்கங்களுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தைக்குப் பின்னர் இடைநிலை ஆசிரியர்கள் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய அவர்கள், உங்களின் கோரிக்கைகளை முதலமைச்சருடன் கலந்து ஆலோசனை செய்து விரைவில் முடிவை அறிவிக்கிறோம் என அமைச்சர் தெரிவித்தார்.
சம வேலைக்குச் சம ஊதியம் வழங்கப்படும் என்று அறிவித்தால் போராட்டத்தை வாபஸ் பெற தயார். அதுவரை ஆசிரியர்கள் போராட்டம் தொடரும் என்று தெரிவித்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுடன் தமிழக அரசு சார்பில், நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைத் தோல்வியில் முடிந்துள்ளது.