ஆதார் அமைப்பின் ஒருங்கிணைந்த இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் தலைமை நிர்வாகி அமித் அகர்வாலின் பதவிக் காலத்தை மேலும் நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
வங்கிக் கணக்கு முதல் பத்திரப்பதிவு வரை அனைத்து சேவைகளுக்கும் தற்போது ஆதார் அட்டை முக்கிய அடையாள சான்றாக உள்ளது. இதனை யு.ஐ.டிஏ.ஐ எனப்படும் ஒருங்கிணைந்த இந்தியத் தனித்துவ அடையாள ஆணைய அமைப்பு வழங்கி வருகிறது. இதன் தலைமை நிர்வாகியாக அமித் அகர்வால் உள்ளார்.
இவரது பதவிக்காலம் நவம்பர் 2-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில், இவரது பதவிக்காலத்தை மேலும் ஓராண்டிற்கு நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இவர் நவம்பர் 02 2024-ஆம் ஆண்டு வரை இவர் பதவியில் இருப்பார்.
அமித் அகர்வால், 1993-ஆம் ஆண்டு பிரிவு சத்தீஸ்கர் கேடர் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவார். இவர் மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய இரு மாநிலங்களில் பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார். பின்னர், சத்தீஸ்கர் மாநிலத்தின் நிதிச் செயலாளராகவும், மாநில அரசாங்கத்தில் வணிக வரி மற்றும் தொழில் நுட்ப கல்வித் துறைகளுக்குப் பொறுப்பு செயலாளராகவும் இருந்துள்ளார். மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கூடுதல் செயலாளராகவும், மத்திய நிதியமைச்சகத்தின் கூடுதல் செயலாளராகவும், இணைச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.