கன்னியாகுமரி மாவட்டத்தில் விடிய விடிய பெய்யும் கனமழையால் மீன்பிடி தொழில் பாதித்து, மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. குளச்சல் முட்டம் தேங்காய்பட்டணம் துறைமுகங்களை சேர்ந்த 8-ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகு 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் துறைமுகங்களிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக பரவலாக மழை பெய்து வருகிறது. அரபிக்கடல் பகுதிகளிலும் அவ்வப்போது காற்றுடன் கனமழையும் பெய்து வருவதால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் உள்ளனர்.
தற்போது மத்திய அரபிக்கடல் பகுதியில் நிலைக் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தமிழகத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்யும் என்றும் மன்னார் வளைகுடா குமரிக்கடல் மற்றும் அதையொட்டியுள்ள அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசுவதுடன் கனமழை பெய்யக்கூடும் எனவும் அந்த பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்தது
இந்த நிலையில் நேற்று முதல் கன்னியாகுமரி மாவட்டத்தில் இடி மின்னலுடன் கனமழை பெய்து வருவதோடு அரபிக்கடல் பகுதிகளிலும் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது
அரபிக்கடல் பகுதிகளில் விடிய விடிய பெய்து வரும் கனமழையால் குளச்சல் முட்டம் தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகங்களை சேர்ந்த 8-ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகு மற்றும் 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், மீனவர்களும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாத நிலையில் தங்கள் படகுகளை துறைமுகங்களில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்
தொடர் கனமழையால் தங்களது வாழ்வாதாரம் பாதிப்படைந்துள்ளதாகவும் மீனவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.