நியூஸ் கிளிக்கின் நிறுவனர் மற்றும் தலைமை ஆசிரியர் பிரபீர் புர்கயஸ்தா, டெல்லி காவல்துறை சிறப்பு பிரிவு அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்டு விசாரணை நடைப்பெற்று வருகிறது. யுஏபிஏ மற்றும் பிற பிரிவுகளின் கீழ் நியூஸ் கிளிக்குடன் தொடர்புடைய பல்வேறு இடங்களில் டெல்லி காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
இரண்டு மாதங்களுக்கு முன்னர் மத்திய அமைச்சர்கள் சிலர் ‘தி நியூயார்க் டைம்ஸ்’ இதழில் நியூஸ்கிளிக் இணையதளத்துக்கு சீன நிறுவனங்கள் நிதியுதவி அளிப்பதாகக் குறிப்பிட்டிருந்ததைச் சுட்டிக்காட்டினர்.
குறிப்பாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறுகையில், “நியூஸ்கிளிக் செய்தி நிறுவத்துக்கு நெவைல் ராய் சிங்கம் என்பவர் நிதியுதவி செய்கிறார். இவருக்கு சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியுடன் நேரடித் தொடர்பு உண்டு. மேலும் இவருக்கு சீன ஊடக நிறுவனமான மக்கு குரூப்புடனும் தொடர்பு உள்ளது” என்றார். அதேபோல் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர், “நியூஸ்கிளிக் இணையம் பரப்பும் பொய்கள், வெறுப்பு ஆகியனவை ராகுல்காந்தியின் போலி பிரச்சாரங்களை பிரதிபலிப்பதாகவே இருக்கின்றன” என்று கூறியிருந்தார்.
நியூஸ் கிளிக் நிறுவனம் சட்டவிரோதமாக வெளிநாடுகளிலிருந்து நிதி பெற்று செயல்பட்டுவந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் அமலாக்கத் துறை 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நியூஸ்கிளிக் நிறுவனத்தில் சோதனை நடத்தியது. அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையில் இருந்து பாதுகாப்புக் கோரி நியூஸ் கிளிக் நிறுவனம் டெல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.
இந்நிலையில் நியூஸ்கிளிக் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க அனுமதி கோரி அமலாக்கத் துறை டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. அமலாக்கத் துறையின் மனு தொடர்பாக பதிலளிக்கக் கோரி நியூஸ்கிளிக் நிறுவனத்துக்கும் அதன் நிறுவனரும் முதன்மை ஆசிரியருமான பிரபீர் புர்கயாஷ்தாவுக்கும் நோட்டீஸ் அனுப்பியது.
இந்தச் சூழலில் அமலாக்கத் துறை தகவல்களின் அடிப்படையில் டெல்லி காவல்துறையினர் இன்று சோதனையில் ஈடுபட்டனர். மேலும் சிறப்புப் பிரிவில் புதிய வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் (யுஏபிஏ) மற்றும் பிற பிரிவுகளின் கீழ் நியூஸ் கிளிக்குடன் தொடர்புடைய பல்வேறு இடங்களில் டெல்லி காவல்துறை சோதனை நடத்தி வருகிறது.
முன்னதாக, அமலாக்க இயக்குனரகம், நிதி ஆதாரங்களை ஆய்வு செய்து, நிறுவனத்தின் வளாகங்களில் சோதனை நடத்தியது. மத்திய ஏஜென்சி வழங்கிய உள்ளீடுகளின் அடிப்படையில் சிறப்புப் பிரிவு இப்போது ஊடக நிறுவனத்தை சோதனை செய்கிறது. நியூஸ் கிளிக்கின் சில பத்திரிக்கையாளர்களின் லேப்டாப் மற்றும் மொபைல் போன்களில் இருந்து டேட்டாவை போலீசார் மீட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் டெல்லி காவல்துறை சிறப்பு பிரிவு அலுவலகத்திற்கு நியூஸ் கிளிக்கின் நிறுவனர் மற்றும் தலைமை ஆசிரியர் பிரபீர் புர்கயஸ்தா அழைத்து செல்லப்பட்டு விசாரணை நடைப்பெற்று வருகிறது. மேலும் இது குறித்த முழு விவரம் விசாரணைக்கு பிறகு தெரியவரும் என்று எதிர்ப்பாக்கப்படுகிறது.