உதய்பூர்-ஜெய்ப்பூர் செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் இரயிலை கவிழ்க்க நடந்த சதி முறியடிக்கப்பட்டிருக்கிறது. தண்டவாளத்தில் கற்களை வைத்து தடம் புரளச் செய்ய சமூக விரோதிகள் செய்த முயற்சியை, அவசரகால பிரேக்கை பயன்படுத்தி ஓட்டுனர் முறியடித்திருக்கிறார்.
இரயில் பயணத்தை எளிமையாக்கும் வகையில், நாடு முழுவதும் வந்தே பாரத் இரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தற்போது 34 வழித்தடங்களில் வந்தே பாரத் இரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில், உதய்பூர்-ஜெய்பூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் இரயில் சமீபத்தில் வடமேற்கு ரயில்வே அஜ்மீர் பிரிவால் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த இரயிலின் இயக்கத்தை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, செப்டம்பர் 24-ம் தேதி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த நிலையில், இந்த இரயில் நேற்று காலை புறப்பட்டு ராஜஸ்தான் மாநிலம் சித்தோர்கர் மாவட்டத்தில் உள்ள கங்ரார் மற்றும் சோனியானா இரயில் நிலையங்களுக்கு இடையே காலை 9:53 மணியளவில் வந்துகொண்டிருந்தது. அப்போது, இரயிலை தடம் புரளச் செய்யும் நோக்கில், சமூக விரோதிகள் சிலர் தண்டவாளத்தில் கற்கள் மற்றும் இரும்புக் கம்பிகளை வைத்திருந்தனர். இதை இரயில் இன்ஜின் ஓட்டுனர் கவனித்து விட்டார். இதையடுத்து, அவசர கால பிரேக்கைப் பயன்படுத்தி இரயில் நிறுத்தப்பட்டது.
இதன் மூலம் சமூக விரோதிகளின் சதி முறியடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, இரயில்வே ஊழியர்கள் கீழே இறங்கி தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த கற்கள் மற்றும் இரும்புக் கம்பிகளை காணொளியாக எடுத்தனர். பின்னர், இதுகுறித்து இரயில்வே பாதுகாப்புப் படை காவல்துறையில் புகார் செய்யப்பட்டது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வரும் நிலையில், வந்தே பாரத் இரயில் ஊழியர்கள் எடுத்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இச்சம்பவம் குறித்து இரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், “இரயில் கங்ராரை கடந்து சென்றபோது, லோகோ பைலட் முபாரக் ஹுசைன், தண்டவாளத்தில் இரும்புக் கம்பிகள் மற்றும் கற்கள் அடுக்கி வைக்கப்பட்டிருப்பதைக் கண்டார். இரும்புக் கம்பிகள் ஒவ்வொன்றும் ஒரு அடி நீளம் இருக்கும். உடனே, அவசர கால பிரேக்கை பயன்படுத்தி இரயிலை நிறுத்தி விட்டார். இதனால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது” என்றார்.
இதுகுறித்து இரயில்வே பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவர் கூறுகையில், “குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கு எதிராக கங்ரார் ஜி.ஆர்.பி. காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த நாசவேலை செயலுக்கு காரணமான குற்றவாளிகளைக் கண்டறிந்து கைது செய்ய விரிவான விசாரணை நடந்து வருகிறது” என்றார்.
இதுகுறித்து வடமேற்கு இரயில்வே மண்டலம் வெளியிட்ட அறிக்கையில் , “ஜெய்ப்பூரில் இருந்து உதய்பூர் சென்ற வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் இரயில் முன்பு கங்ரார் மற்றும் சோனியானா ரயில் நிலையங்களுக்கு இடையே, சமூக விரோதிகள் இரும்புக் கம்பிகள் மற்றும் கற்களை வைத்து இரயிலை கவிழ்க்க முயன்றனர். இந்த சதி முறியடிக்கப்பட்டிருக்கிறது. மேற்கண்ட சமூக விரோதிகளுக்கு எதிராக இரயில்வே நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
This could have been disastrous !!
Well Planned Derailment of Udaipur – Jaipur Vande Bharat Express near Bhilwara.When hate towards a particular political party changes into hate towards nation this is the result, God bless people with such mentality#VandeBharatExpress pic.twitter.com/NzkOCtJNNu
— Saurabh • A Railfan 🇮🇳 (@trains_of_india) October 2, 2023