ஆசியா விளையாட்டுப் போட்டியில் 29 ஆண்டுகளுக்குப் பிறகு படகோட்டுதல் போட்டியில் இந்தியா பதக்கம் வென்றுள்ளது.
19 வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனாவின் ஹாங்சோ நகரில் நடந்துக் கொண்டிருக்கிறது. இந்தப் போட்டிகள் தொடங்கி இன்றோடுப் பத்து நாட்கள் ஆகியுள்ளது.
இன்று ஆடவர் கேனோ 1000 மீட்டர் இரட்டையர் படகோட்டுதல் போட்டி நடைபெற்றது. இதில் இந்திய அணியின் சார்பாக அர்ஜூன் சிங் மற்றும் சுனில் சிங் ஆகியோர் விளையாடினர்.
இதில் அர்ஜூன் சிங் மற்றும் சுனில் சிங் ஆகியோர் 3:53.329 வினாடிகளில் பந்தய இலக்கை எட்டியதால் மூன்றாவது இடத்தை பிடித்து வெண்கல பதக்கம் வென்றனர். ஆசிய விளையாட்டு வரலாற்றில் 29 ஆண்டுகளுக்குப் பிறகு படகோட்டுதல் போட்டியில் இந்தியா பதக்கம் வென்றுள்ளது.
இதற்கு முன்பு 1994 ஆம் ஆண்டு ஹிரோஷிமா விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் சிஜி சதானந்தன் மற்றும் ஜானி ரோம்மல் ஆகியோர் இதேப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தனர். ஆசிய விளையாட்டு வரலாற்றில் கேனோவில் இந்தியா வென்ற இரண்டாவது பதக்கம் இதுவாகும்.