மோசமான வானிலை காரணமாக கோழிக்கோட்டிற்குச் செல்ல வேண்டிய ஷார்ஜா விமானம் கோவையில் தரையிறங்கியது. பின்னர் 9.20 மணிக்கு கோவையிலிருந்து புறப்பட்டுச் சென்றது.
ஷார்ஜாவில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோட்டிற்கு ஏர் அரேபியா விமானம் இயக்கப்படுகிறது. இந்த விமானம் நேற்று நள்ளிரவு ஷார்ஜாவில் இருந்து 170 பயணிகளுடன் புறப்பட்டது. அதிகாலை 3 மணியளவில் விமானம் கோழிக்கோட்டிற்கு வந்தது. அப்போது அங்கு மோசமான வானிலை நிலவியது.
இதனால், விமானத்தைத் தரை இறங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனை அடுத்து விமானத்தை கோவை விமான நிலையத்தில் தரையிறக்க முடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து இன்று அதிகாலை 4 மணிக்கு விமானம் கோவை விமான நிலையத்தில் பத்திரமாக தரை இறங்கியது.
இதை அடுத்து விமானத்தை விட்டு இறங்கிய பயணிகள், விமான நிலையத்தில் உள்ள ஓய்வு அறையில் ஓய்வு எடுத்தனர். இதன் பின் வானிலை சீரடைந்தததால், ஏர் அரேபியா விமானம் காலை 9.20 மணிக்குக் கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து கோழிக்கோட்டிற்குப் புறப்பட்டுச் சென்றது. இதனால், பயணிகள் அவதி அடைந்தனர்.