திருவள்ளூர் அருகே ஆவின் லாரி கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த விபத்தில், சுமார் 4,000 லிட்டா் பால் வீணாக சாலையில் கொட்டியது.
திருவள்ளூர் அருகே உள்ள காக்களூரில் ஆவின் பால் நிறுவனம் உள்ளது. இன்று அதிகாலை திருக்கழுக்குன்றம் பகுதியில் உள்ள பால் நிலையத்தில் இருந்து காக்களூரில் உள்ள ஆவின் நிறுவனத்திற்கு 7405 லிட்டர் பால் ஏற்றிக்கொண்டு டேங்கர் லாரி வந்து கொண்டிருந்தது. இதை மாதவரத்தைச் சேர்ந்த இலட்சுமணன் என்பவர் ஓட்டி வந்தார்.
இந்த நிலையில், திருவள்ளூர் – ஆவடி சாலையில் உள்ள காக்களூர் தொழிற்பேட்டை அருகே லாரி வந்தபோது, எதிரே வந்த வாகனத்தின் மீது மோதாமல் இருக்க டிரைவர் டேங்கர் லாரியை திருப்பி உள்ளார். அப்போது, கட்டுப்பாட்டை இழந்த டேங்கர் லாரி சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் டேங்கர் லாரியில் இருந்த சுமார் 4,000 லிட்டர் பால் வீணாகச் சாலையில் கொட்டி ஆறாக ஓடியது. இதுகுறித்து ஆவின் நிர்வாகத்திற்குத் தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் பேரில் விரைந்து வந்த ஆவின் ஊழியர்கள், மற்றொரு டேங்கர் லாரியை வர வழைத்து, விபத்துக்குள்ளான லாரியில் இருந்து, மீதம் இருந்த பாலை மாற்றி ஏற்றி சென்றனர். பின்னர், கிரேன் உதவியுடன் லாரி மீட்கப்பட்டது.
இதுகுறித்து திருவள்ளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.