சென்னை புறநகர் மின்சார இரயில்களில் குளிர்சாதனப் பெட்டிகளை இணைத்து இயக்க தெற்கு இரயில்வே முடிவு செய்துள்ளது.
சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, தெற்கு இரயில்வேயின் சென்னை இரயில்வே கோட்டம் சார்பில், நாள்தோறும் 630-க்கும் மேற்பட்ட மின்சார இரயில் சேவைகள் இயக்கப்படுகின்றன. இதில், தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் பயணம் செய்கின்றனர்.
மொத்தம் 14 பெட்டிகள் கொண்ட மின்சார இரயிலில் பெண்களுக்கான தனி பெட்டிகள் மற்றும் முதல் வகுப்பு பெட்டிகள் உள்ளது. பயணிகளின் தேவைக்கு ஏற்ப புதிய திட்டங்களையும் இரயில்வே நிர்வாகம் அறிமுகம் செய்து வருகிறது.
மேலும், மின்சார இரயில்களில் குளிர்சாதனப் பெட்டிகளை இணைத்து இயக்க வேண்டும் என தெற்கு இரயில்வேக்கு பயணிகள் நீண்ட கோரிக்கை வைத்தனர். இதேபோல, சென்னை புறநகர் மின்சார இரயில்களில் குளிர்சாதன பெட்டியை இணைப்பது குறித்து ஆய்வு செய்யுமாறு சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் சார்பில் தெற்கு இரயில்வேக்கு பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில், சென்னையில் மின்சார இரயில்களில் 2 முதல் 3 குளிர்சாதனப் பெட்டிகளை இணைத்து சோதனை முறையில் இயக்கிப்பார்க்க தெற்கு இரயில்வே முடிவு செய்துள்ளது. அடுத்த 6 மாதத்தில் இதற்கான சோதனை ஓட்ட நடவடிக்கைகள் தொடங்க உள்ளது. மேலும், பெரம்பூரில் உள்ள ஒருங்கிணைந்த இரயில் பெட்டி தொழிற்சாலையில், ஏற்கனவே மும்பை புறநகர் மின்சார இரயிலுக்குத் தேவையானக் குளிர்சாதனப் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகிறது.
மேலும், சென்னை மின்சார இரயில்களில் இணைப்பதற்குத் தேவையான குளிர்சாதனப் பெட்டிகளைத் தயாரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக, சென்னை கடற்கரை-தாம்பரம்-செங்கல்பட்டு வழித்தடத்தில் குளிர்சாதன வசதி கொண்ட மின்சார இரயில் பெட்டிகளை இயக்குவதற்கு தெற்கு இரயில்வே திட்டமிடப்பட்டுள்ளது.