சுதந்திரப் போராட்ட வீரர் கொடிகாத்த திருப்பூர் குமரன் பிறந்த தினம் இன்று. இவர் ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகிலுள்ள செ. மேலப்பாளையம் என்னும் சிற்றூரில் 1904 அக்டோபர் 4ஆம் தேதி, நாச்சிமுத்து முதலியார் – கருப்பாயி தம்பதியினருக்கு மூன்றாவது மகனாகக் குமரன் பிறந்தார்.
இளம் வயதிலேயே காந்தி கொள்கையில் அதிக ஈடுபாடு கொண்ட குமரன், நாட்டு விடுதலைக்காக காந்தி அறிவித்த போராட்டங்களில் கலந்து கொண்டார்.
1932 ஜனவரி 10 ஆம் தேதியன்று கையில் தேசியக் கொடியினை ஏந்தி, தொண்டர் படைக்குத் தலைமை ஏற்று, அணிவகுத்துச் சென்றபோது ஆங்கில அரசின் காவல்துறையால் தாக்கப்பட்டு, கையில் இந்திய தேசியக் கொடியை விடாமல் உயர்த்திப் பிடித்தவாறே மயங்கி விழுந்தார்.
பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, ஜனவரி 11 இல் உயிர் துறந்தார், இதனால் இவர் கொடிகாத்த குமரன் என்று அழைக்கப்படுகிறார். நாட்டின் விடுதலைக்காக தனது 27-வது வயதில் இன்னுயிரை நீத்தார். திருப்பூர் குமரனின் 119- வது பிறந்த நாளில் அவரது தியாகத்தையும், வீரத்தையும் நினைவு கூர்ந்துப் போற்றி வணங்குவோம்.