இராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேச மாநிலங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நாளை பயணம் மேற்கொள்கிறார். மத்திய பிரதேசத்தில் ரூ.12,600 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்து, அடிக்கல் நாட்டுகிறார்
நாளை காலை 11.15 மணியளவில், இராஜஸ்தானின் ஜோத்பூரில், சாலை, ரயில், விமானப் போக்குவரத்து, சுகாதாரம் மற்றும் உயர் கல்வி போன்ற துறைகளில் சுமார் ரூ.5000 கோடி மதிப்புள்ள பல வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்.
பிற்பகல் 03:30 மணியளவில், மத்திய பிரதேசத்தின் ஜபல்பூர் செல்லும் பிரதமர், அங்கு சாலை, ரயில், எரிவாயுக் குழாய், வீட்டுவசதி மற்றும் சுத்தமான குடிநீர் போன்ற துறைகளில் ரூ.12,600 கோடிக்கும் மேற்பட்ட வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து, அடிக்கல் நாட்டுகிறார்.
இராஜஸ்தானில், பிரதமர்:
இராஜஸ்தானில் சுகாதார உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான முக்கியமான திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். ஜோத்பூரில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் 350 படுக்கைகள் கொண்ட ‘அவசர சிகிச்சை மையம் மற்றும் தீவிர சிகிச்சை மருத்துவமனை பிரிவு’ மற்றும் பிரதமரின்- ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்பு இயக்கத்தின் (பி.எம்-அபிம்) கீழ் ராஜஸ்தான் முழுவதும் உருவாக்கப்படும் ஏழு தீவிர சிகிச்சை பிரிவுகள் ஆகியவை இந்த திட்டங்களில் அடங்கும். ஜோத்பூர் எய்ம்ஸ் மருத்துவமனையில் 350 கோடி ரூபாய் செலவில் ‘விபத்து, அவசர மற்றும் தீவிர சிகிச்சைக்கான’ ஒருங்கிணைந்த மையம் உருவாக்கப்படும். இது, பரிசோதனை, நோயறிதல், பகல்நேர பராமரிப்பு, வார்டுகள், தனியார் அறைகள், நவீன அறுவை சிகிச்சை அரங்குகள், அவசர சிகிச்சை பிரிவுகள் மற்றும் டயாலிசிஸ் பகுதிகள் போன்ற பல்வேறு வசதிகளை உள்ளடக்கியதாக இருக்கும்.
ஜோத்பூர் விமான நிலையத்தில் அதிநவீன புதிய முனையக் கட்டிடத்தை மேம்படுத்தவும் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். மொத்தம் ரூ.480 கோடி செலவில் கட்டப்பட உள்ள இந்தப் புதிய முனைய கட்டிடம், சுமார் 24,000 சதுர மீட்டர் பரப்பளவில் உருவாக்கப்படும். மேலும் நெரிசல் நேரங்களில் 2,500 பயணிகளுக்கு சேவைகளை வழங்கும் வகையில் அமைக்கப்படும். இது, ஆண்டுக்கு 35 லட்சம் பயணிகளுக்கு சேவை செய்து, இணைப்பை மேம்படுத்தி, இந்த பிராந்தியத்தில் சுற்றுலாவை மேம்படுத்தும்.
ஜோத்பூர் இந்திய தொழில்நுட்பக் கழக வளாகத்தையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிப்பார். சுமார் ரூ.1135 கோடி செலவில் அதிநவீன வளாகம் கட்டப்பட்டுள்ளது. உயர்தர முழுமையான கல்வியை வழங்குவதற்கும், அதிநவீன ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க முன்முயற்சிகளை ஆதரிப்பதற்கான உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கும் இது ஒரு சிறந்த நடவடிக்கையாகும்.
இராஜஸ்தான் மத்தியப் பல்கலைக்கழகத்தின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக, ‘மத்திய கருவியியல் ஆய்வகம்’, பணியாளர் குடியிருப்புகள் மற்றும் ‘யோகா மற்றும் விளையாட்டு அறிவியல் கட்டிடம்’ ஆகியவற்றை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிப்பார். ராஜஸ்தான் மத்தியப் பல்கலைக்கழகத்தில் மத்திய நூலகம், 600 பேர் தங்கக்கூடிய விடுதி மற்றும் மாணவர்களுக்கான உணவகம் ஆகியவற்றுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்.
இராஜஸ்தானில் சாலை உள்கட்டமைப்பை மேம்படுத்தும் ஒரு முன்முயற்சியாக, தேசிய நெடுஞ்சாலை -125 ஏ இல் ஜோத்பூர் ரிங் சாலையின் கார்வார் முதல் டாங்கியாவாஸ் பிரிவு வரை நான்கு வழிச்சாலை; ஏழு புறவழிச்சாலைகள் / ஜலோர் (என்.எச்-325) வழியாக பலோத்ராவின் முக்கிய நகரப் பகுதிகளை சந்தேராவ் பிரிவு வரை மறுசீரமைப்பு செய்தல்; தேசிய நெடுஞ்சாலை 25 இன் பச்பத்ரா-பாகுண்டி பிரிவை நான்கு வழிச்சாலையாக மாற்றும் திட்டம் உள்ளிட்ட பல சாலை மேம்பாட்டுத் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். இந்த சாலை திட்டங்கள் சுமார் ரூ.1475 கோடி செலவில் உருவாக்கப்படும். ஜோத்பூர் ரிங் ரோடு, நகரத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், வாகன மாசுபாட்டைக் குறைக்கவும் உதவும். இந்தத் திட்டங்கள் இணைப்பை மேம்படுத்தவும், வர்த்தகத்தை அதிகரிக்கவும், வேலைவாய்ப்பை உருவாக்கவும், பிராந்தியத்தில் பொருளாதார வளர்ச்சிக்கும் உதவும்.
ராஜஸ்தானில் இரண்டு புதிய ரயில் சேவைகளை பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். ஜெய்சால்மரை தில்லியுடன் இணைக்கும் புதிய ரயில் – ருனிச்சா விரைவு ரயில் மற்றும் மார்வார் சந்திப்பு- காம்ப்ளி படித்துறையை இணைக்கும் புதிய பாரம்பரிய ரயில் ஆகியவை இதில் அடங்கும்.
மத்திய பிரதேசத்தில் பிரதமர்
பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதி திட்டத்தின் கீழ் சுமார் ரூ.128 கோடி செலவில் கட்டப்பட்ட இந்த திட்டம் 1000 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு பயனளிக்கும். அனைத்து அடிப்படை வசதிகளுடன், குறைந்த கட்டுமான நேரத்தில் தரமான வீடுகளைக் கட்டுவதற்கு ‘ப்ரீ-இன்ஜினியரிங் செய்யப்பட்ட எஃகு கட்டமைப்பு ப்ரீஃபாப்ரிகேட்டட் சாண்ட்விச் பேனல் அமைப்புமுறை’ என்ற புதுமையான தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.
தனிநபர் வீட்டுக் குழாய் இணைப்புகள் மூலம் பாதுகாப்பான மற்றும் போதுமான குடிநீரை வழங்குவதற்கான பிரதமரின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்கும் ஒரு படியாக, மாண்ட்லா, ஜபல்பூர் மற்றும் திண்டோரி மாவட்டங்களில் ரூ.2350 கோடி மதிப்புள்ள ஜல் ஜீவன் இயக்க திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்படும்.
சியோனி மாவட்டத்தில் ரூ.100 கோடி மதிப்பிலான ஜல் ஜீவன் இயக்க திட்டத்தை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிப்பார். மாநிலத்தின் நான்கு மாவட்டங்களை உள்ளடக்கிய இந்த திட்டங்கள், மத்திய பிரதேசத்தின் சுமார் 1575 கிராமங்களுக்கு பயனளிக்கும்.
மத்திய பிரதேசத்தில் சாலை உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக ரூ.4800 கோடி மதிப்புள்ள பல்வேறு திட்டங்களுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிப்பார்.
தேசிய நெடுஞ்சாலை எண் 346-ன் ஜார்கேடா- பெராசியா- தோல்கேடியை இணைக்கும் சாலையின் மேம்பாட்டு பணிகள்; தேசிய நெடுஞ்சாலை 543 இன் பாலகாட் – கோண்டியா பிரிவின் நான்கு வழிச்சாலை; ருதி மற்றும் தேஷ்கானை இணைக்கும் கண்ட்வா புறவழிச்சாலையின் நான்கு பாதைகள்; தேசிய நெடுஞ்சாலை 47 இன் தெமாகான் முதல் சிச்சோலி பிரிவு வரை நான்கு வழித்தடம்; போரேகானில் இருந்து ஷாபூரை இணைக்கும் நான்கு வழிச்சாலை; மற்றும் ஷாபூரை முக்தைநகருடன் இணைக்கும் நான்கு வழிச்சாலை உள்ளிட்ட திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். தேசிய நெடுஞ்சாலை 347 சி-யின் கல்காட்டை சர்வர்டேவ்லாவுடன் இணைக்கும் சாலையை மேம்படுத்தும் பணியை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிப்பார்.
ரூ.1850 கோடி மதிப்பிலான இரயில் திட்டங்களை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். கட்னி – விஜயசோட்டா (102 கி.மீ) மற்றும் மார்வாஸ்கிராம் – சிங்ரௌலி (78.50 கி.மீ) ஆகியவற்றை இணைக்கும் ரயில் பாதையை இரட்டிப்பாக்குவது இதில் அடங்கும். இந்த இரண்டு திட்டங்களும் கட்னி – சிங்ரௌலி பிரிவை இணைக்கும் இரயில் பாதையை இரட்டிப்பாக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாகும். இந்த திட்டங்கள் மத்திய பிரதேசத்தில் ரயில் உள்கட்டமைப்பை மேம்படுத்தும், இது மாநிலத்தில் வர்த்தகம் மற்றும் சுற்றுலாவுக்கு பயனளிக்கும்.
விஜய்பூர் – அவுரையன் – புல்பூர் பைப்லைன் திட்டத்தை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிப்பார். 352 கி.மீ நீளமுள்ள இந்தக் குழாய் சுமார் ரூ.1750 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது.
மும்பை நாக்பூர் ஜார்சுகுடா பைப்லைன் திட்டத்தின் நாக்பூர் ஜபல்பூர் பிரிவுக்கும் (317 கி.மீ) பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். ரூ.1100 கோடி மதிப்பில் இந்த திட்டம் கட்டப்பட உள்ளது.
எரிவாயுக் குழாய் திட்டங்கள், தொழிற்சாலைகள் மற்றும் வீடுகளுக்கு சுத்தமான மற்றும் மலிவு விலையில் இயற்கை எரிவாயுவை வழங்கும், மேலும் சுற்றுச்சூழலில் உமிழ்வுகளைக் குறைப்பதற்கான ஒரு முன்முயற்சியாக இருக்கும். ஜபல்பூரில் சுமார் ரூ.147 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய பாட்டிலிங் ஆலையையும் பிரதமர் அர்ப்பணிக்கிறார்.