91-வது இந்திய விமானப்படைத் தினக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, ககன்யான் பயணத்திற்கான இந்திய விண்வெளி வீரர்களை முதன்முறையாக காட்சிப்படுத்தி இந்திய விமானப்படை காணொளி வெளியிட்டிருக்கிறது. அந்தக் காணொளியில் தீவிர உடற்பயிற்சிகளில் ஈடுபட்டிருக்கின்றனர்.
நிலவுக்கும், சூரியனுக்கும் விண்கலத்தை அனுப்பிய உற்சாகத்தில் இருக்கும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ, அடுத்தகட்டமாக விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் முயற்சியில் இறங்கி இருக்கிறது. இத்திட்டத்தை கடந்த 2018-ம் ஆண்டே இஸ்ரோ தயார் செய்து விட்டது. அப்போதே பாரதப் பிரதமர் நரேந்திர மோடியும் “ககன்யான்” திட்டம் குறித்து அறிவித்தார். ககன்யான் என்றால் சமஸ்கிருதத்தில் ஸ்பேஸ் கிராஃப்ட் என்று பொருள்.
இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் என்னவென்றால், 3 விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு அனுப்பி, அவர்களை மீண்டும் பத்திரமாக பூமிக்கு கொண்டு வருவதுதான்.இத்திட்டத்தை 2021-ம் ஆண்டு செயல்படுத்த இஸ்ரோ திட்டமிட்டிருந்தது. ஆனால், 2020-ம் ஆண்டில் நிலவிய கொரோனா பெருந்தொற்று காரணமாக பல்வேறு பணிகளில் சுணக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக, இத்திட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. இத்திட்டம் 2024-ல் ஆட்கள் இல்லாமலும், 2025-ல் ஆட்களுடனும் செயல்படுத்தப்படும் என்று தெரிகிறது.
அதாவது, முதல்கட்டமாக எந்த பேலோடுகளும் இல்லாமல் விண்வெளிக்கு ராக்கெட்டை அனுப்பி சோதனை செய்யப்படும். இதில், நல்ல முடிவுகள் கிடைத்தால் மட்டுமே விண்வெளிக்கு வீரர்கள் அனுப்பப்படுவார்கள். இந்த ககன்யான் திட்டம் என்பது 3 நாட்கள் கொண்ட திட்டமாகும். இதன்படி, 3 விண்வெளி வீரர்களுடன் விண்வெளிக்கு புறப்படும் ராக்கெட், பூமியிலிருந்து சுமார் 400 கி.மீ. உயரத்தில் நிலைநிறுத்தப்படும். அங்கு, 3 விண்வெளி வீரர்களும் 3 நாட்கள் ஆய்வு செய்வார்கள். பின்னர், 3 பேரும் மீண்டும் பத்திரமாக பூமிக்கு கொண்டு வரப்படுவார்கள்.
எனினும், இத்திட்டத்திற்கான ராக்கெட்டில் தற்போது கூடுதலாக க்ரூ எஸ்கேப் சிஸ்டம் என்ற புதிய கருவி செட் செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் விண்வெளி வீரர்களுக்கு ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் எந்த நேரத்திலும் பத்திரமாக பூமியில் தரையிறங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அதேபோல, விண்வெளி வீரர்கள் பயன்படுத்துவதற்கான பிரத்யேக ஸ்பேஸ் சூட் கடந்த 2019-ம் ஆண்டு பெங்களூரு ஸ்பேஸ் எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டது.
இதை கேரளாவிலுள்ள விக்ரம் சாராபாய் ஸ்பேஸ் சென்டர் விஞ்ஞானிகள் 2 ஆண்டுகள் பல்வேறு ஆய்வுகளை செய்து உருவாக்கி இருக்கிறார்கள்ள். இதில் ஒரு ஆக்ஸிஜன் சிலிண்டர் பொருத்தப்பட்டிருக்கும். விண்வெளிக்கு செல்லும் வீரர் இந்த ஆக்ஸிஜன் சிலிண்டரை சுமார் 60 நிமிடங்கள் வரை சுவாசிப்பதற்காக பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த ககன்யான் திட்டத்திற்கும் சந்திராயன் 3 விண்கலத்தை அனுப்பிய அதே எல்.வி.எம். மார்க் 3 ராக்கெட்தான் பயன்படுத்தப்டுகிறது.
இத்திட்டத்திற்காக அரசு 9,023 கோடி ரூபாய் ஒதுக்கி இருக்கிறது. எனினும், இத்திட்டத்திற்கான விண்வெளி வீரர்களை தேர்வு பணியில் சிக்கல் ஏற்பட்டது. ஏனெனில், விண்வெளியில் ஈர்ப்பு விசை இருக்காது. அதாவது, பூமியின் மேற்பரப்பில் நாம் ‘1ஜி’ விசையை அனுபவிக்கிறோம். இதுதான் சாதாரண ஈர்ப்பு விசை. இது விண்வெளியில் இருக்காது. அதோடு, இந்தியாவிடம் பிரத்யேக விண்வெளி வீரர்களும் இல்லை.
எனவே, விண்வெளி வீரர்களுக்குப் பதிலாக இந்திய விமானப்படை விமானிகள் இப்பணிக்கு தேர்வு செய்யப்பட்டனர். அதாவது, போர் விமானிகளால் அதிக ஈர்ப்பு விசைகள் மற்றும் சிக்கலான வான்வழி சூழ்ச்சிகளின்போது அனுபவிக்கும் ‘ஜி விசைகளை’ தாங்க முடியும். ஆகவே, விண்வெளிப் பயணத்திற்கு 4 போர் விமானிகள் தேர்வு செய்யப்பட்டனர். இந்த விண்வெளி வீரர்களுக்கு ஏற்கெனவே ரஷ்யாவின் காகரின் காஸ்மோனாட் பயிற்சி மையத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது.
தற்போது, இந்தியாவில் சிமுலேட்டர் மற்றும் கோட்பாட்டு பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். இந்த விண்வெளி வீரர்களின் காணொளியைத்தான், இந்திய விமானப்படை வெளியிட்டிருக்கிறது. அதாவது, 91-வது இந்திய விமானப்படைத் தினக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இந்தக் காணொளியை இந்திய விமானப்படை வெளியிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இக்காணொளியில் இந்திய விண்வெளி வீரர்கள், தீவிர உடற்பயிற்சிகளில் ஈடுபட்டிருப்பது தெரிகிறது.
1984-ல் சோவியத் இன்டர்காஸ்மோஸ் திட்டத்தின் ஒரு பகுதியாக, விங் கமாண்டர் ராகேஷ் சர்மா விண்வெளிக்குச் சென்று வந்தார். இவர்தான் இந்தியாவின் முதல் மற்றும் ஒரே விண்வெளி வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.
First-look of #indian astronaut candidates revealed in latest #IndianAirForce video 🇮🇳🚀👨🚀
Could be the IAF pilot-astronauts working out& preparing for their new role..why else would they share a back-facing-camera shot ?? #isro #india #space #Gaganyaan #Science #tech pic.twitter.com/0WbsyHElXI
— Sidharth.M.P (@sdhrthmp) October 3, 2023