சந்திரயான் -3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேலுக்கு, சென்னையில் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
சென்னை அடுத்துள்ள காட்டாங்குளத்தூரில் அமைந்துள்ளது ஒரு பிரபல தனியார் உயர் கல்வி நிறுவனம். இந்த நிறுவனத்தின் சார்பில் கல்வி பயின்ற மாணவ, மாணவிகளுக்குப் பட்டமும், தேச நலனுக்காக சாதனை படைத்தவர்களுக்குக் கௌரவ டாக்டர் பட்டமும் வழங்கப்பட்டது.
அந்த வகையில், சந்திரயான் -3 வெற்றிக்காகப் பாடுபட்ட திட்ட இயக்குநர் வீரமுத்துவேலுக்கு, பெரம்பலூர் எம்பி பாரிவேந்தர் டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்தார்.
அதேபோல, ஆயுஷ் அமைச்சகத்தில் பெரும் சாதனை படைத்த, பாரத் ஆயுஷ் அமைச்சக செயலாளர் வைத்யா ராஜேஷ் கோட்சாவுக்கும், கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மாணவ, மாணவிகளுக்கு, பட்டமும், பதக்கமும் வழங்கப்பட்டது.
பின்னர் விழாவில் பேசிய சந்திரயான் -3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேல், விண்வெளி ஆய்வு செய்வதில் உலக அளவில், பாரதம் 4 -வது இடத்தில் உள்ளது. எந்த துறையிலும் முயற்சி செய்தாலும் வெற்றி கிடைக்கும். ஆனால், யாருக்கும் வெற்றி எளிதில் கிடைக்காது. நாமும், கடும் முயற்சிக்குப் பின்னரே சந்திரயான் -3 வெற்றியைக் கொண்டாடி வருகிறோம். எனவே, நாம் தோல்விகளைக் கண்டு துவண்டுவிடக்கூடாது. முயற்சி செய்தாலே வெற்றி பெற்றுவிடலாம் என்றார்.