சேவாக், கவுதம் கம்பீர், யுவராஜ் சிங் போன்ற பெரிய வீரர்களுக்குக் கிடைக்காத வாய்ப்பு, தனக்கு சரியான நேரத்தில் கிடைத்திருப்பதாக இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
2007ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 கிரிக்கெட் உலகக்கோப்பை வென்ற இந்திய அணியில் மிகமுக்கிய வீரராக இருந்தவர் ரோகித் சர்மா. ஆனால் 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடருக்கான இந்திய அணியில் ரோகித் சர்மா தேர்வு செய்யப்படவில்லை. ஆனால் அடுத்தடுத்து இரு உலகக்கோப்பைத் தொடரில் சிறப்பாக ஆடிய ரோகித் சர்மா, இம்முறை தலைவராக இந்திய வீரர்களை வழிநடத்தவுள்ளார்.
ஐந்து முறை ஐபிஎல் கோப்பையை வென்ற ரோகித் சர்மா, இம்முறை இந்தியாவுக்காக உலகக்கோப்பையை வெல்வார் என்று இரசிகர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.
இந்த நிலையில் உலகக்கோப்பைத் தொடரை குறித்தும், தலைமைப் பொறுப்பைக் குறித்தும் ரோகித் சர்மா பேசுகையில், தலைமைப் பொறுப்பு என்பது ஒரு கிரிக்கெட் வீரர் உச்சத்தில் இருக்கும் போது வழங்கப்பட வேண்டும். ஒரு கிரிக்கெட் வீரர் 27 அல்லது 28 வயதில் உச்சக்கட்ட ஃபார்மில் இருப்பார். ஆனால் நாம் நினைத்ததெல்லாம் உடனடியாக நடக்காது. மிகப்பெரிய வீரர்கள் பலருக்கும் இந்திய அணியை வழிநடத்தும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
அதனால் தனக்கான வாய்ப்புக்காக காத்திருக்க வேண்டும் என்பதே சரியானது. ஏனென்றால் எனக்கு முன் கேப்டன்சி செய்தது தோனியும், விராட் கோலியும் தான். அவர்கள் இருவரும் சாதாரண வீரர்கள் கிடையாது. இது அனைவருக்கும் தெரியும். அதேபோல் கவுதம் கம்பீர், சேவாக் உள்ளிட்டோருக்கு இந்திய அணியை வழிநடத்தும் வாய்ப்பே கிடைக்கவில்லை. யுவராஜ் சிங்கை நினைத்து பாருங்கள். அவர் ஒருமுறை கூட இந்திய அணியை வழிநடத்தியதில்லை.
இந்திய அணியின் கேப்டனாக யுவராஜ் சிங்கிற்குச் செயல்பட வாய்ப்பு கிடைத்திருக்க வேண்டும். ஆனால் அது கடைசி வரை கிடைக்கவில்லை, அதுதான் வாழ்க்கை. எனக்கு இப்போதுக் கிடைத்திருக்கிறது. அதற்காக பெருமைக் கொள்கிறேன். அதேப்போல் எப்படி அணியை வழிநடத்த வேண்டும் என்பது நன்றாக தெரிய வந்த பின், எனக்கு தலைமைப் பொறுப்புக் கொடுக்கப்பட்டது. கேப்டன்சி பற்றி ஏபிசிடி ( ABCD ) கூட தெரியாமல் இருந்த நேரத்திற்கு பதில் இப்போது வழங்கப்பட்டதே சரியானது என்று தெரிவித்துள்ளார்.