ஆசனூர் பகுதியில் இரண்டு குட்டி யானைகளுடன் சாலையில் உலா வந்த காட்டு யானைகளால், வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து திம்பம் மலைப்பாதை வழியாக பெங்களூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இது சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதி வழியாகச் செல்கிறது. இந்த வனப்பகுதியில், புலி, சிறுத்தை, யானை, காட்டெருமை, மான் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. இப்பகுதியில் உள்ள வன விலங்குகள் உணவு மற்றும் தண்ணீரைத் தேடி சாலையைக் கடந்து செல்கிறது.
அப்போது, சாலையோரம் உள்ள மரம், செடி, கொடிகளை யானைகள் பறித்து உண்பது வழக்கம். இந்த நிலையில் ஆசனூர் அடுத்த காரப்பள்ளம் என்ற இடத்தில், வனப்பகுதியிலிருந்து 2 குட்டி யானைகளுடன் 2 காட்டு யானைகள், சாலையோரம் நடந்து சென்றன.
இரண்டு குட்டி யானைகள் நடுவில் நடந்து செல்ல, இருபுறமும் இரு யானைகள் பாதுகாப்புடன் அழைத்துச் சென்றதை, அந்த வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் ஆர்வத்துடன் பார்த்தனர். மேலும், சிலர் தங்களது வாகனங்களை நிறுத்தி விட்டு, ஆர்வ மிகுதியால் தங்களது செல்போன்களில், யானைக் கூட்டங்களைப் படம் எடுத்தனர்.
இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறும்போது, வனப்பகுதியை விட்டு வெளியேறிய 2 யானைகள் குட்டிகளுடன் சாலையோரம் உலா வருகின்றன.
வாகன ஓட்டிகள் ஆர்வம் மிகுதியால், வாகனங்களைச் சாலையிலேயே நிறுத்திவிட்டு, தங்களது செல்போன்களில் வீடியோவோ, படமோ எடுக்கக் கூடாது. யானைகளைத் தொந்தரவு செய்ய வேண்டாம். யானைகள் தாக்கும் அபாயம் உள்ளதால், இந்த பகுதிகளைக் கடக்கும் போது மிகுந்த கவனமுடன் கடக்க வேண்டும் என்று கூறினர்.