மருந்துப் பொருட்களை இறக்குமதி செய்வதற்காக, இந்தியாவுடன் இலங்கை ஒப்பந்தம் செய்யவுள்ளது.
கடந்த ஆண்டு இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியைச் சந்தித்தது. இதனால், அங்கு பல்வேறு பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்தது. மேலும், அத்தியாவசிய பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டது.
குறிப்பாக, மருத்துவமனைகளில் அத்தியாவசிய மருந்து பொருட்களுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டது. மருந்து தட்டுப்பாடு மற்றும் காலாவதியான ஊசி மருந்துகளால் மருத்துவமனைகளில் ஏராளமான மரணங்கள் ஏற்பட்டன. மேலும், பலருக்கு உடல் பாதிப்புகள் ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து இலங்கை சுகாதாரத் துறை அவசரகாலக் கொள்முதலுக்கு உத்தரவிட்டது. இது பெரிய அளவிலான ஊழல்களுக்கு வழிவகுக்கம், இது தரமற்ற மருந்துகளை, சரியான சோதனைகள் செய்யாமல், நுழைய அனுமதிக்கும் என்று எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து ஊழலைத் தடுப்பதற்காக இலங்கை அரசாங்கம் அவசரக்கால மருந்துக் கொள்முதலை நிறுத்தியது.
இந்தியா மற்றும் வங்காள தேசம் ஆகிய நாடுகளின் அரசுகளுடன், மருந்து இறக்குமதிக்கான ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை சுகாதாரத்துறை அமைச்சர் கெகலிய ரம்புக்வெல்ல தெரிவித்து உள்ளார்.