நைஜீரியாவில் தீவிராவதிகள் நடத்திய தாக்குதலில், 29 இராணுவ வீரர்கள் உயிரிழந்ததாகவும், இரண்டு இராணுவ வீரர்கள் படுகாயமடைந்ததாகவும் அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஆப்பிரிக்காவில் பொருளாதார ரீதியில் பெரிய நாடுகளில் ஒன்றாக இருக்கும் நைஜீரியாவில், முகமது பாசும் தலைமையிலான ஆட்சி நடந்து வந்தது. கடந்த ஜூலை மாதம் 26-ஆம் தேதி அந்நாட்டு இராணுவத்தால் அதிபர் முகமது பாசும் சிறைபிடிக்கப்பட்டார்.
அதன் பிறகு அங்கு இராணுவ ஆட்சி அமைந்தது. இந்த நிலையில் அண்டை நாடான மாலி எல்லை அருகே தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக உளவுத்துறைக்குத் தகவல் கிடைத்தது.
அதன்பேரில் அங்குள்ள தபடோல் பகுதியில் இராணுவத்தினர் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட தீவிரவாதிகள், இராணுவ வீரர்கள் சென்ற வாகனம் மீது வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தினர்.
இதில் 29 இராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் இரண்டு இராணுவ வீரர்கள் படுகாயம் அடைந்தனர். இதனை அடுத்து இராணுவம் நடத்திய தாக்குதலில், பல தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் என்று நைஜர் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.