ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜாவில் பாதுகாப்பு மற்றும் வெளியேற்ற செயல்முறையை அறிந்துகொள்ள மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, ஆகாய பேருந்தில் (ஸ்கை பஸ்) பரிசோதனை பயணம் மேற்கொண்டார்.
மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, அக்டோபர் 2-ம் தேதி செக் குடியரசுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டார். அங்கு, ப்ராக் நகரில் நடந்த 27-வது உலக சாலை பாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொண்டார். பின்னர், இந்தியா திரும்பும் வழியில், இன்று ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜா நகருக்குச் சென்றார். அங்கு, பாதுகாப்பு மற்றும் வெளியேற்ற செயல்முறையை அறிந்து கொள்ள யுஸ்கை தொழில்நுட்பத்தின் பைலட் சான்றிதழ் மற்றும் அனுபவ மையத்தை நிதின் கட்கரி பார்வையிட்டார். தொடர்ந்து, ஆகாயப் பேருந்தில் (ஸ்கை பஸ்) பரிசோதனை பயணம் மேற்கொண்டார்.
இதுகுறித்து நிதின் கட்கரி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “யுஸ்கை தொழில்நுட்பம் ஸ்கை பஸ்களை உருவாக்கி இருக்கிறது. மேலும், இந்த சேவைகளை இந்தியாவுக்கு கொண்டு வர யுஸ்கை நிறுவனத்துடன் ஐஸ்கை மொபிலிட்டி ஒப்பந்தம் மேற்கொண்டிருக்கிறது. ஸ்கை பஸ் ஒரு நிலையான, நெரிசல் இல்லாத நகர்ப்புற சேவைக்கு உகந்தது. இது மாசுபாடு மற்றும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கிறது. அதேசமயம், நகர்ப்புற குடியிருப்பாளர்களுக்கு திறமையான சேவையை வழங்குகிறது. மேலும், அதன் உயர்த்தப்பட்ட ரயில் கேபிள் அமைப்பு நில பயன்பாட்டைக் குறைக்கிறது” என்று தெரிவித்திருக்கிறார்.