தலைநகர் சென்னை அடுத்துள்ள குன்றத்தூரில் அருள்பாலித்து வரும் முருகன் திருக்கோவிலில் 54 ஆண்டுகளுக்குப் பிறகு சூரசம்ஹாரம் வைபவம் நடைபெற உள்ளது.
தலைநகர் சென்னை அடுத்துள்ள தாம்பரத்திலிருந்து 16 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது குன்றத்தூர் அருள்மிகு முருகன் திருக்கோவில்.
சூரபத்மனைத் திருச்செந்தூரிலும், சிங்கமுகாசுரனை திருப்பரங்குன்றத்திலும், தாருகாசுரனை திருப்போரூரிலும் சூரசம்ஹாரம் செய்தார் முருகப் பெருமான். திருப்போரூரில் சூரசம்ஹாரம் செய்து திருத்தணி செல்லும் வழியில் முருகப் பெருமான் அமர்ந்த மலையே குன்றத்தூர் மலை என போற்றப்படுகிறது.
இப்படிச் சிறப்பு வாய்ந்த இந்த மலையில் கடந்த 1969 -ம் ஆண்டு சூரசம்ஹாரம் நடைபெற்றது. அதன் பிறகு பல்வேறு காரணங்களால் சூரசம்ஹாரம் வைபவம் நடைபெறவில்லை.
இந்த நிலையில், வரும் நவம்பர் மாதம் 13 -ம் தேதி கந்த சஷ்டி விழா தொடங்க உள்ளது. இந்த விழா தொடர்ந்து 6 நாட்கள் நடைபெறும்.
இதனைத் தொடர்ந்து, சூரசம்ஹார வைபவம் 18 -ம் தேதியான சனிக்கிழமை நடைபெற உள்ளது. மலையடிவாரத்தில் நடைபெறும் இந்த வைபவத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
திருச்செந்தூரில் எப்படி சூரசம்ஹார விழா நடைபெறுமோ அதுபோல நடத்துவதற்கான ஏற்பாடுகளைத் திருக்கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர். 54 வருடங்களுக்குப் பிறகு சூரசம்ஹாரம் நடைபெறுவதால் முருக பக்தர்கள் அனைவரும் பெரும்கிழ்ச்சி அடைந்துள்ளனர்.