புரட்டாசி மாதம் சனிக்கிழமை நாளில் வரும் அமாவாசை சிறப்பு வாய்ந்தது. இந்த மாதம் 14-ஆம் தேதி வரும் அமாவாசை, சனிக்கிழமை மகாளய பட்சம் அமாவாசை சூரிய கிரகணத்தோடு வருவதால் மிக சிறப்பு வாய்ந்தது.
இந்த நாளில் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் அளித்தால், பல நூறாண்டுகள் தர்ப்பணம் அளித்த புண்ணியம் கிடைக்கும். சகல ஐஸ்வர்யங்களும், செல்வமும் பெருகும்.
சனிக்கிழமை நாளில் சூரிய கிரகணமும், மகாளய அமாவாசையும் சேர்ந்து வருவது பலநூறு ஆண்டுகளுக்கு ஒருமுறை வரக்கூடியது என்று ஜோதிடர்கள் கூறியுள்ளனர். இந்த அமாவாசை நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதோடு ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கினால் ஐஸ்வர்யம் பெருகும்.
நம் மூன்று தலைமுறையில் உள்ள முன்னோருக்குச் செய்கிற ஆராதனை, நம்மையும் நம் சந்ததியையும் இனிதே வாழ வைக்கும் என்கிறது கருடபுராணம். பொதுவாகவே அமாவாசை திதி தினத்தன்று முன்னோர்களை வழிபடுவது வழக்கம். அன்றைய தினம் முன்னோர்களை நினைத்து தானம் கொடுப்பார்கள். காக்கைக்கு உணவு கொடுப்பார்கள். முக்கியமாக ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை, தை அமாவாசை நாட்கள் சிறப்பானது என்று புனித தீர்த்தங்களில் நீராடி, படையலிட்டு வழிபடுவது வழக்கம்.
அமாவாசை அன்று ஒவ்வொரு வீட்டு வாசலிலும் அந்தந்த வீட்டு பித்துருக்கள் வந்து நின்று கொண்டு காத்து இருக்கிறார்கள். அவர்களுக்கு எள் கலந்த தண்ணீரைத் தரவேண்டும். இதனால் அவர்கள் மனம் மகிழ்ந்து ஆசீர்வதிப்பர். இவ்வாறு செய்யாவிட்டால் பித்ருக்கள் வருத்தப்படும்போது அது பித்ரு தோஷமாக சந்ததியரின் ஜாதகத்தில் அமைகிறது. எனவே தவறாது சிரார்த்தம் தர்ப்பணம் செய்ய வேண்டும். நம் பித்ருக்கள் சக்தி நிறைந்தவர்கள். அவர்கள் ஆசீர்வாதத்தால் புண்ணியமும் செல்வமும் கிடைக்கும். மகாளய பட்ச காலமான 14 நாட்களும் முன்னோர்கள் நம்முடன் தங்கியிருக்கிறார்கள் என்பது ஐதீகம்.
புனிதமான தர்ப்பணங்களை செய்யாமல் இருந்தால், கருக்கலைவு, குழந்தையின்மை, உடல் குறைபாடுகள் உள்ள குழந்தைப் பிறப்பு, மூளை வளர்ச்சிக் குறைவுள்ள குழந்தைப் பிறப்பு, குடும்பத் தகராறு, அகால மரணம், ஆரோக்கியக் குறைபாடு, திருமணத் தடை, தீய பழக்கங்கள் போன்ற விரும்பத்தகாத சம்பவங்கள் குடும்பத்தில் நடைபெற்று, நிம்மதியைக் குலைத்துவிடும் என்கிறது சாஸ்திரம்.
இவை பித்ரு தோஷம், மாத்ரு தோஷம், நாதி தோஷம், பந்து தோஷம், புத்ர தோஷங்களாகத் திகழ்கின்றன. இவை முறையற்ற வாழ்க்கை, தேவையற்ற கோபம், மன உளைச்சல், மன அழுத்தம், தற்கொலைச் சிந்தனை, உடல்வலி போன்றவை ஏற்பட்டு, நிம்மதியற்ற வாழ்க்கை அமைந்துவிடும்.
சனிக்கிழமை தினத்தில் அமாவாசை வருவது விசேஷமானது. அன்றைய தினம் சனிபகவானையும் வழிபடலாம். முன்னோர்களையும் வழிபட்டு அவர்களுக்குப் பிடித்தமான உணவுகளை படையலிட்டு இயலாதவர்களுக்குத் தானம் கொடுக்கலாம். ஏழைகளுக்கு அன்னதானம் கொடுத்தால் முன்னோர்களின் ஆசி கிடைக்கும். இந்த நிலையில், வருகிற 14-ஆம் தேதி மகாளய அமாவாசை சனிக்கிழமை வருகிறது. அந்த நாளில் சூரிய கிரகணமும் நிகழ உள்ளது.
சனி பகவான் அமாவாசை தினத்தில் பிறந்ததால், சனிக்கிழமை வரும் அமாவாசை அன்று எள் தீபம் ஏற்றி வழிபடலாம். சனிபகவானை வழிபட்டால் அச்சம், பயம் நீங்கும். கறுப்பு நிற ஆடை சாற்றி வழிபட்டால் தடைகள், வேதனைகள் நீங்கும். பித்ரு தோஷம், காலசர்ப்ப தோஷம் உள்ளவர்கள் சனிக்கிழமை அமாவாசை நாளில் தோஷ நிவாரணம் செய்யலாம். விரதம் இருந்து தானம் கொடுக்க பிரச்சினைகள் நீங்கும்.