சம வேலைக்குச் சம ஊதியம் வழங்க வேண்டும் எனச் சென்னையில் போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்கள் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டனர்.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் கடந்த 2009 -ம் ஆண்டு மே 31-ம் தேதி நியமிக்கப்பட்ட அரசுப் பள்ளி இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒரு ஊதியமும், அதே ஆண்டு ஜூன் 1-ம் தேதி பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு மற்றொரு ஊதியமும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக, அடிப்படை ஊதியத்தில் ரூ.3,170 குறைந்துள்ளது.
இதனால், பாதிக்கப்பட்ட சுமார் 20 ஆயிரம் ஆசிரியர்கள், இந்த முரண்பாட்டைக் கலைய வேண்டும் என்றும், சம வேலைக்குச் சம ஊதியம் வழங்க வேண்டும் என்றும், இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் சார்பில் சென்னை டிபிஐ வளாகத்தில் கடந்த 7 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மேலும், பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு, தமிழக சிறப்பாசிரியர்கள் சங்கம் மற்றும் ஒருங்கிணைந்த சிறப்பாசிரியர்கள் சங்கத்தைச் சேர்ந்த ஆசிரியர்களும், டெட் தேர்ச்சி பெற்றவர்களுக்குப் பணி வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து 2013-ம் ஆண்டு டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் கூட்டு நலச்சங்கத்தினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கல்வித் துறையுடன் நடத்திய பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இந்த நிலையில், சம வேலைக்குச் சம ஊதியம் வழங்க வலியுறுத்தி, சென்னையில் போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்கள் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டனர்.
ஆசிரியர்கள் கைதுக்கு பல்வேறு சங்கங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.