வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுக்கு எதிராக 40 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளதாக ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் இளங்கோவன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
கடந்த 2013-ம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளோம், அதையும் தாண்டி அரசு சார்பில் வைக்கப்பட்ட பல்வேறு சிறப்புத் தேர்வுகளிலும் வெற்றி பெற்றுள்ளோம். ஆனால், பணி நிரந்தரம் மட்டும் செய்யவில்லை.
கடந்த 8 நாட்களாகத் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். ஆனால், போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் அனைத்து முயற்சியிலும் அரசு ஈடுபட்டது. அரசுக்கும் எங்களுக்கும் இடையே நடைபெற்ற 5 கட்ட பேச்சு வார்த்தைகளும் தோல்வி அடைந்துவிட்டது.
ரூ.10,000 சம்பளத்தில் அரசுப் பணியில் அமர்த்த கேட்டோம். நிதிப் பற்றாக்குறையைக் காரணம் காட்டி எங்கள் கோரிக்கையைப் புறக்கணித்துவிட்டனர்.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக எத்தனை தொகுதிகளில் நிற்கிறதோ அத்தனை தொகுதிகளிலும் நாங்கள் போட்டியிடுவோம். குறிப்பாக, திமுக 40 தொகுதிகளில் நின்றால், 40 தொகுதிகளிலும் போட்டியிடுவோம்.
திமுக அரசால் பாதிக்கப்பட்ட செவிலியர் சங்கங்கள் உள்ளிட்ட அனைவரும் ஒன்றிணைந்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுக்கு பாடம் கற்பிப்போம் என்றார்.