டிடிஎஃப் வாசனின் பைக்கை எரித்துவிடலாம் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.
நெடுஞ்சாலையில் விபத்து ஏற்படுத்திய வழக்கில் செப்டம்பர் 19ம் தேதி யூடியூபர் டி.டி.எஃப்.வாசன் கைது செய்யப்பட்டார்.
புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள டி.டி.எப்.வாசன், ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை காஞ்சிபுரம் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
இந்நிலையில் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு, இன்று விசாரணைக்கு வந்தது.
இந்த மனு, நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன் இன்று விசாரணைக்கு வந்தபோது, காவல்துறையினர் சார்பில், “20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பைக் வைத்துள்ளார். 3 லட்சம் மதிப்புள்ள பாதுகாப்பு உடை அணிந்ததால் உயிர்தப்பியிருக்கிறார். இவரது யூ-ட்யூப் சேனலை பின்தொடரும் 45 லட்சம் பேர் சிறார்கள். அவர்கள் இவரைப்பார்த்து அதி வேகமாக வாகனம் ஓட்டுவதும், பலர் திருட்டு சம்பவங்களிலும் ஈடுபடுவதும் நடக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, மருத்துவ காரணங்களைக் கூறி ஜாமீன் கேட்ட டிடிஎஃப் வாசனின் கோரிக்கையை நிராகரித்த நீதிபதி கார்த்திகேயன் அவருக்கு மருத்துவ சிகிச்சையை சிறையிலேயே வழங்க உத்தரவிட்டுள்ளார்.
மேலும், நீதிபதி கார்த்திகேயன் “விளம்பரத்திற்காகவும் மற்ற இளைஞர்களை தூண்டும் வகையிலும் செயல்பட்ட மனுதாரரின் வழக்கு மற்ற இளைஞர்களுக்கு பாடமாக அமைய வேண்டும். எனவே அவர் நீதிமன்ற காவலில் நீட்டிக்க வேண்டும். அவரது யூட்யூப் பக்கத்தை மூடிவிட்டு பைக்கை எரித்துவிட்டு மீண்டும் நீதிமன்றத்தை நாடவும்” என தெரிவித்துள்ளார்.