ஆசிய விளையாட்டுப் போட்டியில் இதுவரை இந்திய மொத்தமாக 20 தங்கங்களை வென்று சாதனைப் படைத்துள்ளது.
19-வது ஆசிய விளையாட்டுப் போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் 45 நாடுகளைச் சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில் இன்று ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் பிரிவுப் போட்டி நடைபெற்றது. இதில் இந்திய அணியின் சார்பாக தீபிகா பல்லிகல் மற்றும் ஹரிந்தர்பால் சிங் ஆகியோர் பங்குப்பெற்றனர்.
இந்தப் போட்டியில் இந்திய அணி மலேசியாவின் ஐஃபா பிந்தி அஸ்மான் மற்றும் முகமது சயாபிக் ஆகியோரை முதல் சுற்றில் 35 நிமிடங்களில் 11-10 என்ற கணக்கில் வெற்றிப் பெற்றது.
அடுத்து இரண்டாம் சுற்றில் இந்திய வீரர்கள் 9-3 என்றக் கணக்கில் மலேசியாவை வீழ்த்தியது. இதன் மூலம் இந்திய அணி 2-0 என்ற செட் கணக்கில் போட்டியை வென்று தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றியது.
இதன் மூலம் இந்திய அணி 20 தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளது. மேலும் 31 வெள்ளி, 32 வெண்கலம் என மொத்தம் 83 பதக்கங்களைப் பெற்றுள்ளது.