டெல்லியில், சட்டம் ஒழுங்கிற்கு சவால் விடும் வகையில் போராட்டம் நடத்திய ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகள் மீது போலீஸ் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர்.
டெல்லி அரசின் கலால் கொள்கை வழக்கில் பணமோசடி விசாரணை தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்யசபா எம்பி சஞ்சய் சிங், அமலாக்க இயக்குநரகத்தால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
டெல்லி அரசின் கலால் கொள்கை விவகாரத்தில், கடந்த பிப்ரவரி மாதம் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, தற்போது இதே வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவரான சஞ்சய் சிங் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் புதுடெல்லியில் காலை 7 மணி முதல் சஞ்சய் சிங்கின் வீட்டில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
சஞ்சய் சிங்கின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய ஒரு சில மணி நேரங்களில் அவரை கைது செய்தனர்.
இதற்கிடையில், சஞ்சய் சிங் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, ஆம் ஆத்மி கட்சியினர் மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இதனால், சஞ்சய் சிங்கின் வீட்டின் முன்வாசலில் பாதுகாப்பு கருதி ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, சஞ்சய் சிங் கைதுக்கு கண்டனம் தெரிவித்து, ஆம் ஆத்மி கட்சி தலைமையகம் முன்பு தொண்டர்கள் திரண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை கலைந்து போகுமாறு காவல்துறை வேண்டுகோள் விடுத்தது. ஆனால், அவர்கள் யாரும் கலைந்துபோகவில்லை.
நேரம் ஆகஆக பதற்றம் கூடிக்கொண்டே சென்றது. இதனால். போராட்டக்காரர்கள் மேல் தண்ணீரை பீய்ச்சி அடித்தும், லத்தி சார்ஜ் செய்தும் கூட்டத்தை கலைத்தனர். இதனையடுத்து, டெல்லியில் அமைதி திரும்பியுள்ளது.