விஞ்ஞானிகளுக்கும், அறிவியலுக்கும் முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ள ‘தி வேக்சின் வார்’ என்ற திரைப்படத்துக்கு, பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பூசி தயாரிக்கப்பட்டது தொடர்பாக, பிரபல பாலிவுட் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி இயக்கத்தில், தி வேக்சின் வார்’ படம் சமீபத்தில் வெளியாகி, மக்களின் வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில், மத்தியப் பிரதேசத்தில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில், இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளதாவது, கொரோனா பரவலின் போது நம் நாட்டு விஞ்ஞானிகள் இரவு பகலாக உழைத்து தடுப்பூசியைக் கண்டுபிடித்தனர். ஆனால், இங்குள்ள சிலர் அது குறித்து சந்தேகம் எழுப்பினர்.
நம் விஞ்ஞானிகளின் கடின உழைப்பை விளக்கும் வகையில், ‘தி வேக்சின் வார்’ என்ற படம் தற்போது வெளியாகிப் பாராட்டுகளைக் குவித்து வருகிறது. இந்தப் படத்தைப் பார்க்கும் ஒவ்வொரு இந்தியரும், நம் நாடு குறித்து பெருமை அடைகின்றனர். இந்த படத்தைத் தயாரித்த குழுவினருக்கு என் பாராட்டுக்கள் என்று கூறினார்.
இந்த படம் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரியின் மனைவியும், நடிகையுமான பல்லவி ஜோஷியின் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்டது. இதில் அனுபம் கெர், நானா படேகர், சப்தமி கவுடா, பல்லவி ஜோஷி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
தி வேக்சின் வார் படத்தைப் பாராட்டிய பிரதமர் நரேந்திர மோடிக்கு, விவேக் அக்னிஹோத்ரி நன்றி தெரிவித்துள்ளார்.
த வேக்சின் வார் படத்திற்கு முன்பாக, ஹேட் ஸ்டோரி, தி காஷ்மீர் பைல்ஸ் உள்ளிட்ட படங்களை விவேக் அக்னிஹோத்ரி இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.