ரெப்போ விகிதம் முந்தைய அளவான 6.5 சதவீதத்திலேயே தொடரும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு நாட்களாக ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கைக் குழு கூட்டம் மும்பையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ரெப்போ விகிதத்தை முந்தைய அளவான 6.5 சதவீதத்திலேயே தொடர முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ரெப்போ விகிதம் என்பது வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கு விதிக்கப்படும் வட்டி விகிதமாகும். ரெப்போ விகிதம் உயரும் போது வீடு மற்றும் வாகனக் கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகரிக்கும். ஆனால் தொடர்ந்து 4வது முறையாக இது 6.5 சதவீதத்திலேயே தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் வீடு, வாகன கடன் வட்டி உயராது.
இது குறித்து ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கூறும்போது,
“பேரினப் பொருளியல் ஸ்திரத்தன்மை மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய வளர்ச்சி ஆகியனதான் நம் நாட்டின் வளர்ச்சிக்கான அடிப்படைக் கோட்பாடுகளாகும். கடந்த சில ஆண்டுகளாக பலதரப்பட்ட, இணையற்ற பொருளாதார அதிர்வுகளின் ஊடே நாம் எடுத்த நிதிக் கொள்கைகள் பேரினப் பொருளாதாரம் மற்றும் நிதிநிலை ஸ்திரத்தன்மை வழிவகுத்துள்ளது.
தற்சமயம் ரெப்போ விகிதத்தை 6.5 சதவீதத்திலேயே தொடர முடிவு செய்துள்ளோம். தொடர்ந்து பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்று தெரிவித்தார்.
6.5 சதவீத வளர்ச்சி: மேலும் அவர் கூறுகையில், “அனைத்து காரணிகளையும் கருத்தில் கொண்டு ஆய்வு செய்ததன் பேரில், 2023-24 நிதியாண்டில் ஜிடிபி (ஒட்டுமொத்த வளர்ச்சிக் குறியீடு) 6.5 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது” என்றார்.
தொடர்ந்து 4-வது முறையாக ரெப்போ விகிதம் மாற்றம் செய்யப்படாதது குறிப்பிடத்தக்கது.