மும்பை – அகமதாபாத் இடையிலான, ‘புல்லட்’ இரயில் திட்டத்துக்காக, குஜராத் மாநிலம் வல்சாட்டில் மலையைக் குடைந்து சுரங்கப்பாதை வெற்றிகரமாக அமைக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் இருந்து, குஜராத் மாநிலம் அகமதாபாத் வரையில், புல்லட் இரயில் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த திட்டத்துக்காக, கடந்த 2016-ஆம் ஆண்டு என்.எச்.எஸ்.ஆர்.சி.எல்., எனப்படும் தேசிய அதிவிரைவு இரயில் கழகம் உருவாக்கப்பட்டது. இத்திட்டத்துக்கான நிதி, கட்டுமானம், பராமரிப்பு மற்றும் நிர்வாகப் பணிகளை இந்த கழகம் மேற்கொண்டு வருகிறது.
மும்பை – அகமதாபாத் இடையிலான புல்லட் இரயில் வழித்தடத்தில் ஏழு மலைகள் உள்ளன. இந்த மலைகளைக் குடைந்து சுரங்கப்பாதை அமைக்கும் பணியைத் தேசிய அதிவிரைவு இரயில் கழகம் செய்து வருகிறது.
இந்த வழித்தடத்திலான முதல் மலை, குஜராத்தின் வல்சத் மாவட்டத்தில் உள்ள சரோலி கிராமத்தில் இருந்து, 1 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. இந்த மலையைக் குடையும் பணி, 10 மாதங்களுக்கு முன் தொடங்கியது.
புதிய ஆஸ்ட்ரியன் சுரங்க தொழில்நுட்ப முறையைப் பின்பற்றி, 10 மாதங்களில் மலையைக் குடைந்து சுரங்கப்பாதை உருவாக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தேசிய அதிவிரைவு இரயில் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சுரங்கப்பாதை 350 மீட்டர் நீளம், 12.6 மீட்டர் விட்டம், 10.25 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சுரங்கப்பாதையில் 2 தண்டவாளம் அமைய உள்ளது என்று தெரிவித்துள்ளது.