அரசு வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 35 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் அறிவிப்பை, மத்தியப் பிரதேச மாநில அரசு வெளியிட்டுள்ளது.
மத்தியப் பிரதேசத்தில், முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது. முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் மாநிலத்தின் வளர்ச்சியிலும், மக்கள் நலப் பணிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார். குறிப்பாக, பெண்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார்.
அதன்படி காவல் துறையில் பெண்களுக்கு 35 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கவும், ஆசிரியர் பணியில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கவும், ஏற்கனவே முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் உத்தரவு பிறப்பித்து இருந்தார்.
மேலும், உள்ளாட்சித்துறை பணிகளில் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கவும், பெண்களுக்குத் தரமான கல்வி கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், பெண் குழந்தைகளுக்கான கல்வி செலவை அரசே ஏற்கும் என்றும் மாநில அரசு தெரிவித்து இருந்தது.
இந்தநிலையில், அரசு வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 35 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் உத்தரவை மத்தியப் பிரதேச மாநில அரசு வெளியிட்டுள்ளது. இதற்காக சிவில் சர்வீஸ் பணிகளுக்கான அரசு வேலைவாய்ப்பு விதிகளில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. எனினும் வனத்துறையிலான வேலைவாய்ப்புக்கு இந்த உத்தரவு பொருந்தாது.