திமுக இளைஞரணி செயலாளரும், தமிழக விளையாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் மற்றும் சேகர் பாபு ஆகியோர் மீதான வழக்கு வரும் 11-ம் தேதிக்குத் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நடைபெற்ற ஒரு விழாவில் கலந்து கொண்ட திமுக இளைஞரணி செயலாளரும், தமிழக விளையாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், சனாதனம் குறித்து தவறாக பொருள்படும்படி சர்ச்சை கருத்துக்களைப் பேசினார்.
இதனால், உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராகத் தமிழகம் மட்டுமல்லாது, நாடு முழுவதும் பெரும் போராட்டம் வெடித்தது. மேலும், ஜம்மு – காஷ்மீரிலும் வழக்கு தொடரப்பட்டது.
இதனிடையே, சனாதனம் குறித்து உண்மைக்கு மாறான கருத்தைப் பரப்பிய, திமுக இளைஞரணி செயலாளரும், தமிழக விளையாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், திமுக எம்பி ஆ.ராசா மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு காவல் நிலையங்களிலும், தமிழக அரசிடமும் பாஜக மற்றும் ஹிந்து அமைப்புகள் புகார் தெரிவித்திருந்தன. ஆனால், அதனைக் கண்டுகொள்ளவில்லை.
இதனால், இந்த சம்பவம் தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில், கிஷோர் வழக்கு தாக்கல் செய்தார். இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக ஆதாரங்களைத் தாக்கல் செய்யுமாறு நீதிபதி உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கை வரும் 11-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.