தமிழக அரசுக்கு எதிரான கூட்டுறவு சங்கங்களின் தொடர் போராட்டம் கடந்த 3-ம் தேதி முதல் சத்தமில்லாமல் நடந்து வருகிறது. வரும் 9-ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்திருக்கும் கூட்டுறவு சங்க ஊழியர்கள், கோரிக்கை நிறைவேறாவிட்டால் 12-ம் தேதி சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்திருப்பதால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.
விவசாயிகள் பயன்பெறும் வகையில், தமிழகம் முழுவதும் ஏராளமான கிராமங்களில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் செயல்பட்டு வருகின்றன. மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும், இந்த கூட்டுறவு சங்கங்கள், மாநில கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்த தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள்தான் விவசாயிகளின் உயிர் நாடி என்றால் மிகையாகாது.
ஆம், விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்குவதில் தொடங்கி, ஆட்டு லோன், மாட்டு லோன், நகைக்கடன் வரை வழங்கி வருகிறது. இதுதவிர, விவசாயத்திற்கு அடிப்படைத் தேவையான உரங்களையும் மானிய விலையில் வழங்கி வருகிறது. இந்த தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் இல்லாவிட்டால், விவசாயிகளின் ஒட்டுமொத்த வாழ்க்கையுமே ஸ்தம்பித்துப் போய் விடும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
அவ்வளவு ஏன், விவசாயம் செய்வதற்காக விவசாயிகள் வாங்கும் நகைக்கடன்களை அவ்வப்போது தள்ளிபடி செய்து அவர்களது வயிற்றில் பால் வார்ப்பதும் இந்த கூட்டுறவு வங்கிகள்தான். இது மட்டுமா, கிராமப்புறங்களில் இருக்கும் மாணவர்களுக்கு பிறப்புச் சான்றிதல் முதல் ஜாதிச் சான்றிதழ் வரை வழங்குவதற்கு இங்கு இ சேவை மையமும் செயல்பட்டு வருகிறது. போதாக்குறைக்கு, தற்போது தி.மு.க. அரசு அறிவித்திருக்கும் மகளிர் உரிமைத் தொகையும் இதே கூட்டுறவு வங்கிகள் மூலமாகத்தான் வழங்கப்படுகிறது.
இப்படிப்பட்ட கூட்டுறவு வங்கிகள் இதுவரை எந்தப் பிரச்னையும் இல்லாமல்தான் இயங்கிக் கொண்டிருந்தது. ஆனால், தற்போது ஒரு விசித்திரமான புதிய சிக்கலுக்கு உள்ளாகி இருக்கிறது என்பதுதான் விவகாரமே. அதாவது, ஒவ்வொரு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியும், ஆட்டோ, டிராக்டர், லாரி மற்றும் கதிர் அறுவடை செய்யும் இயந்திரம் ஆகிய 4 வாகனங்களை கண்டிப்பாக வாங்க வேண்டும் என்றொரு உத்தரவு, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளரிடமிருந்து வந்திருக்கிறது.
இது ஏதோ இலவசமாகக் கொடுப்பது அல்ல. தனி நபர் ஒருவர், லோனில் வானங்களை வாங்கும் அனைத்து நடைமுறைகளும் கூட்டுறவு வங்கிகளுக்கும் பொருந்தும் என்பதுதான் பேரிடியாக அமைந்தது. சுருக்கமாகச் சொல்வதானால், மேற்கண்ட வாகனங்களை இணைப் பதிவாளர் கைகாட்டும் குறிப்பிட்ட தனியார் நிறுவனங்களிடம் இருந்துதான் வாங்க வேண்டும். அவ்வாறு வாங்கும் வாகனங்களை விவசாயிகளுக்கு வாடகைக்கு விட்டு, மாதம்தோறும் வட்டியுடன் தவணையை செலுத்த வேண்டும்.
இதற்குத்தான் கூட்டுறவு வங்கிகளின் ஊழியர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார்கள். இந்த நவீன யுகத்தில் ஊர் ஊருக்கு டிராக்டரும், கதிர் அறுக்கும் இயந்திரங்களும் குவிந்து கிடக்கின்றன. போதாக்குறைக்கு வேளாண் பொறியியல் துறையில் மேற்கண்ட வாகனங்கள் இருக்கின்றன. அவர்களே விவசாயிகளுக்கு வாடகைக்கு விடமுடியாமல் அல்லாடி வருகின்றனர். அப்படி இருக்க, நாங்கள் எங்கே போய் விவடாயிகளுக்கு வாடகைக்கு விட முடியும் என்று எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார்கள்.
விளைவு, கடந்த அக்டோபர் 1-ம் தேதி முதல் போராட்டத்தை அறிவிக்க திட்டமிட்டிருந்தார்கள். ஆனால், 1 மற்றும் 2-ம் தேதிகள் விடுமுறை என்பதால் 3-ம் தேதி முதல் தொடர் போராட்டத்தை அறிவித்திருக்கிறார்கள். அதன்படி, ஏற்கெனவே வாகனத்தை வாங்கியவர்கள், மேற்கண்ட வாகனங்களை இணைப் பதிவாளர் அலுவலகத்துக்கு கொண்டு சென்று விட்டு விட்டு, சாவியையும் ஒப்படைத்திருக்கிறார்கள்.
தொடர்ந்து, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் கடந்த 3-ம் தேதி முதல் பூட்டப்பட்டிருக்கின்றன. இதனால், விவசாயிகள் பயிர்கடனும் வாங்க முடியவில்லை, நகைக் கடனும் வாங்க முடியவில்லை. அவசரத்திற்கு சேமிப்புத் தொகையைக் கூட எடுக்க முடியவில்லை. முக்கியமாக, மகளிர் உரிமைத் தொகை தொடர்பான மறுசீராய்வு விண்ணப்பங்களையும் பதிவு செய்ய முடியவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக, விவசாயத்திற்கு அடிப்படைத் தேவையான உரங்களைக் கூட வாங்க முடியவில்லை.
இதனால் திக்குத் தெரியாமல் விவசாயிகள் திக்குமுக்காடிப் போய் இருக்கிறார்கள். அதேசமயம், கூட்டுறவு சங்கப் பணியாளர்களோ, வங்கிகளைத் திறப்பதாகத் தெரியவில்லை. இந்த சூழலில், வரும் 9-ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்திருக்கிறார்கள். மேலும், தங்களது கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால், 12-ம் தேதி சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் அறிவித்திருக்கிறார்கள். மேலும், இப்போராட்டத்தில் நியாயவிலைக் கடைப் பணியாளர்களும் ஈடுபடப்போவதாக அறிவித்திருக்கிறார். ஆகவே, ஏழை எளிய மக்கள் ரேஷன் பொருட்களும் பெற முடியாத சூழல் நிலவிப் போகிறது.
இதுகுறித்து தமிழக பா.ஜ.க. மாநில செயற்குழு உறுப்பினரும், விவசாய அணியின் திருச்சி மாவட்டத் தலைவருமான சுப்பிரமணி கூறுகையில், “கிராமப்புற விவசாயிகளுக்கு உயிர் நாடியாக விளங்குவது தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள்தான். பயிர்க்கடன், விவசாயக்கடன், நகைக்கடன் என பலவித கடன்களை வாங்கித்தான் விவசாயம் செய்து வருகிறோம். முக்கியமாக உரங்கள் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளில்தான் வாங்குகிறோம். ஆனால், கூட்டுறவு வங்கிகள் பூட்டிக் கிடப்பதால் எதுவுமே செய்ய முடியவில்லை.
இது ஒருபுறம் இருக்க, இப்போராட்டத்தில் நியாயவிலைக் கடைப் பணியாளர்களும் ஈடுபடப் போவதாக அறிவித்திருக்கிறார்கள். கிராமப்புற மக்களைப் பொறுத்தவரை ரேஷன் பொருட்களை நம்பித்தான் இருக்கிறோம். ஆனால், இவர்களும் போராட்டத்தில் ஈடுபடுவதால் அரசி, பருப்பு, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிப் பொருட்கள் கிடைக்காமல் அல்லாட வேண்டிய நிலை ஏற்படப்போகிறது. இதற்கெல்லாம் தி.மு.க. அரசுதான் காரணம்.
அனைத்துத் துறையிலும் ஊழல், லஞ்சம், கமிஷன் தலைவிரித்து ஆடுகிறது. அந்த வகையில், தற்போது மக்களின் அடிப்படை மற்றும் அத்தியாவசியத் தேவைகளை பூர்த்தி செய்யும் கூட்டுறவுத் துறையிலும் கமிஷனுக்கு அடிப்போட்டு, வாகனங்களை வாங்கும்படி வற்புறுத்தி இருக்கிறார்கள். இதனால், பாதிக்கப்படப்போவது விவசாயிகளும், ஏழை மக்களும்தான். தி.மு.க.வின் இதுபோன்ற செயல்பாடுகள் எங்கு போய் முடியப்போகிறதோ தெரியவில்லை” என்றார் வேதனையுடன்.