ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி நாளை மறுநாள் களமிறங்கவுள்ள நிலையில், நட்சத்திர வீரர் சுப்மன் கில்லுக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஒரு நாள் உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் வரும் ஞாயிற்றுக்கிழமை இந்திய அணி ஆஸ்திரேலியா அணியுடன் விளையாட உள்ளது.
இந்தப் போட்டியில் ஒரு முக்கிய வீரராக திகழ்பவர் இந்திய வீரர் சுப்மன் கில். இந்திய, ஆஸ்திரேலியா போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கவுள்ள நிலையில், இந்தப் போட்டியில் விளையாடுவதற்காக நேற்று முன்தினமே இந்திய வீரர்கள் சென்னை வந்தனர்.
சென்னையில் களமிறங்கிய முதல் நாளிலேயே இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். அதிலும் நட்சத்திர வீரர் விராட் கோலி 45 நிமிடங்கள் கூடுதல் பயிற்சியில் ஈடுபட்டார். ஆனால் தொடக்க வீரர் சுப்மன் கில் இந்திய அணியின் பயிற்சியில் ஈடுபடவில்லை.
நேற்றும் சுப்மன் கில் வலைப் பயிற்சியில் ஈடுபடவில்லை. வழக்கமாக பயிற்சியை தவற விடாமல் இருக்கும் வீரர் சுப்மன் கில் தான் என்று ரோகித் சர்மா அண்மையில் கூறியிருந்தார். இதனால் சுப்மன் கில் பயிற்சியை தவறவிட்டது சந்தேகத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இந்திய நட்சத்திர வீரர் சுப்மன் கில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. மருத்துவ பரிசோதனையிலும் சுப்மன் கில்லுக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதால், அவர் ஓய்வில் இருக்கிறார்.
இதனால் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான உலகக்கோப்பைப் போட்டியில் சுப்மன் கில் பங்கேற்பாரா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதேபோல் இந்திய அணி நிர்வாகம் அவரது உடல்நிலையை தீவிரமாக கண்காணித்து வருவதாகவும், அவர் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இருப்பாரா என்பது அக்.8 ஆம் தேதி முடிவு செய்யப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.