வைகுண்ட ஏகாதசியையொட்டி ரூ. 300 ஆன்லைன் சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் 2 இலட்சமும், இலவச தரிசன டிக்கெட்டுகள் 5 லட்சமும் என மொத்தம் 7 இலட்சம் டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிட திருப்பதி திருமலை தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து திருப்பதி ஏழுமலையான் கோவில் தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் தர்மா ரெட்டி கூறியதாவது, ஏழுமலையான் கோவிலில் வரும் டிசம்பர் மாதம் 23-ஆம் தேதி முதல் ஜனவரி 1-ஆம் தேதி வரை வைகுண்ட ஏகாதசி கொண்டாடப்பட உள்ளது. பக்தர்களின் கோரிக்கையை ஏற்று வைகுண்ட ஏகாதசியையொட்டி ரூபாய் 300 ஆன்லைன் சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் 2 இலட்சமும், 5 இலட்சம் இலவச தரிசன டிக்கெட்டுகள் என மொத்தம் 7 இலட்சம் டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
மலையில் உள்ள உணவகங்களில் பக்தர்களுக்கு அதிக விலையில் உணவு வழங்கப்படுவதாக பல்வேறு புகார்கள் வருகின்றன. பக்தர்களுக்குக் குறைந்த விலையில் உணவு வழங்க அன்னமைய்யா மாளிகை மற்றும் நாராயணகிரி பகுதியில் உணவகங்கள் அமைக்க சுற்றுலாத் துறைக்குக் கட்டிடங்கள் வாடகைக்கு விடப்படும்.
வருகிற 15-ஆம் தேதி முதல் 23-ஆம் தேதி வரை பிரம்மோற்சவ விழாவை பிரமாண்ட முறையில் நடத்த விரிவான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. கருட சேவை நடைபெறும் 19-ஆம் தேதி மலை பாதையில் இருசக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், 17-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை திருமலையில் பக்தர்களுக்கு அறை வாடகை விடுவது நிறுத்தப்படும்.
வருகிற 29-ஆம் தேதி சந்திர கிரகணத்தை முன்னிட்டு, 28-ஆம் தேதி இரவு 7.05 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும். மறுநாள் அதிகாலை 3 .15 மணிக்கு நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்” என்று கூறினார்.