உலகக் கோப்பைத் தொடரில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்கதேச அணி ஆப்கானிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது.
ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெறுகின்றன. அதன்படி, தர்மசாலாவில் இன்று காலை 10.30 மணிக்கு தொடங்கிய 3-வது லீக்கில் ஆப்கானிஸ்தான் – வங்கதேசம் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தது.
இதனையடுத்து, பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி, வங்கதேசத்தின் சுழற்பந்து வீச்சைச் சமாளிக்க முடியாமல் 156 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆப்கானிஸ்தான் அணியில் அதிகபட்சமாக குர்பாஸ் 47 ரன்கள் எடுத்தார்.
வங்கதேசம் அணியில் சிறப்பாக பந்துவீசிய ஷகிப் அல் ஹசன் மற்றும் மெஹிதி ஹாசன் மிராஸ் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். மேலும், ஷோரிஃபுல் இஸ்லாம் 2 விக்கெட்டுகளையும், டஸ்கின் அகமது மற்றும் முஸ்தபிசூர் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
இதனை அடுத்து, 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேசம் அணி களமிறங்கியது. தன்சித் ஹாசன் மற்றும் லிட்டன் தாஸ் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கினர். தன்சித் ஹாசன் 5 ரன்களிலும், லிட்டன் தாஸ் 13 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். பின்னர், மெஹிதி ஹாசன் மிராஸ் மற்றும் நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடி சிறப்பாக விளையாடி வங்கதேசத்தை வெற்றியை நோக்கி கொண்டு சென்றது. மெஹிதி ஹாசன் மிராஸ் 73 பந்துகளில் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அதன் பின், நஜ்முல் ஹொசைனுடன் கேப்டன் ஷகிப் ஜோடி சேர்ந்தார். பின்னர், 14 ரன்கள் எடுத்து ஷகிப் ஆட்டமிழந்தார். தொடர்ந்து, களத்திலிருந்த நஜ்முல் ஹொசைன் 83 பந்துகளில் 59 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இறுதியில், 4 விக்கெட்டை மட்டும் இழந்த வங்கதேச அணி 34.4 வது ஓவரிலே 158 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றுள்ளது.