2023 ஆம் ஆண்டின் முதல் உலகக்கோப்பை போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று சென்னையில் விளையாடவுள்ளது.
உலகக் கோப்பையில் இந்திய கிரிக்கெட் அணி தனது முதல் போட்டியை இன்று தொடங்குகிறது. ஐந்து முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவை சென்னையில் உள்ள எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் எதிர்கொள்கிறது.
இதில் கேப்டன்களாக ரோஹித் சர்மா மற்றும் பாட் கம்மின்ஸ் களமிறங்கும் முதல் உலக கோப்பையும் இதுவே ஆகும். அதனால் இரு அணிகளும் வெற்றியுடன் தொடங்கும் முனைப்பில் உள்ளன.
சென்னையில் இரு அணிகள் மோதும் நான்காவது ஒருநாள் போட்டியாகும். இதுவரை ஆடிய மூன்றுப் போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணியே முன்னிலை பெற்றுள்ளது. இதில் 2 ஆட்டங்களில் ஆஸ்திரேலியா வெற்றியும், ஒரு போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றுள்ளது.
உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியை பொறுத்த வரையில் சென்னையில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது போட்டி இது. இதற்கு முன் 1987ல் இரு அணிகளும் நேருக்கு நேர் மோதின. அந்த போட்டியில் ஆஸ்திரேலியா அணி ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலகக் கோப்பையில் இந்தியா இதுவரை 4 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அதே சமயம் எட்டு முறை தோல்வியை சந்தித்துள்ளது. நான்கு வெற்றிகளைப் பற்றி பேசுகையில், இந்தியா 1983, 1987, 2011 மற்றும் 2019-ல் 4 முறை சாம்பியன் அணியை தோற்கடித்துள்ளது.
2003 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியும், 2015 உலகக் கோப்பையின் அரையிறுதிப் போட்டியும் இருவருக்கும் இடையே நடந்தன. இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி தோல்வியை சந்திந்தது.
இன்று நடைபெறும் போட்டியில் இந்தியா வெற்றியுடன் தொடங்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.