இஸ்ரேல் மீதான ஹமாஸ் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்திருக்கின்றன.
இஸ்ரேல் மீது காஸா தன்னாட்சி பெற்ற நகரத்தின் ஹமாஸ் தீவிரவாதிகள் நேற்று முதல் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இத்தாக்குதலில் இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் பலியானதாகவும், 1,500-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதேபோல, இஸ்ரேல் நடத்திய பதிலடித் தாக்குதலில் 250-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் பலியாகி இருப்பதாகவும், 1,600-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
இந்த நிலையில், இஸ்ரேல் மீதான திடீர் தாக்குதலுக்கு அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, இத்தாலி உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்திருக்கின்றன. இதுகுறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறுகையில், “இது மனிதகுல அளவில் மிகப்பெரிய சோகம். நான் இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் பேசினேன். தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய அமெரிக்கா தயாராக இருப்பதாகத் தெரிவித்தேன். மேலும், இந்த தீவிரவாதத் தாக்குதல்களை எதிர்கொள்ளும் இஸ்ரேல் மக்களுடன் அமெரிக்கா துணை நிற்கிறது என்பதையும் தெரிவித்தேன்.
எனது நிர்வாகத்தில், இஸ்ரேலின் பாதுகாப்பிற்கான ஆதரவு உறுதியானது மற்றும் அசைக்க முடியாதது. இஸ்ரேல் குடிமக்களுக்குத் தேவையான உதவிகள் அனைத்தையும் நாங்கள் உறுதி செய்வோம். மேலும், அவர்கள் தொடர்ந்து தங்களைத் தற்காத்துக் கொள்ளத் தேவையான உதவிகளையும் செய்வோம். இஸ்ரேலுக்கு தன்னையும் தன் மக்களையும் காக்க உரிமை உண்டு. நான் ஒன்றை தெளிவாக சொல்லிக்கொள்ள விரும்புகிறேன், இஸ்ரேலுக்கு விரோதமாக இத்தாக்குதல்களைச் சுரண்டுவதற்கும், ஆதாயம் தேடுவதற்கும் இது தருணமல்ல. உலகம் உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது” எச்சரித்தார்.
மேலும், எகிப்து, துருக்கி, கத்தார், சவூதி அரேபியா, ஜோர்டான், ஓமன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஐரோப்பிய நட்பு நாடுகள் உள்ளிட்ட பிராந்தியத்தில் உள்ள நாடுகளுடன் நிலைமை குறித்து தொடர்பில் இருக்குமாறு அவர் தனது தேசிய பாதுகாப்புக் குழுவை அறிவுறுத்தினார்.
அதேபோல, இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலை பிரிட்டன், ஜெர்மனி, இத்தாலி போன்ற நாடுகளும் கண்டித்திருக்கின்றன. இதுகுறித்து பிரிட்டன் வெளியுறவுச் செயலர் ஜேம்ஸ் க்ளெவர்லி கூறுகையில், “ஹமாஸின் திடீர் தாக்குதல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது” என்று கூறியிருக்கிறார். ஜெர்மனி நாட்டு வெளியுறவு அமைச்சர் அனலெனா பேர்போக், “காஸாவிலிருந்து இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலைக் கண்டிக்கிறது. ஹமாஸ் தீவிரவாதிகள் உடனடியாக தாக்குதலை நிறுத்திக் கொள்ள வேண்டும்” என்று எச்சரித்திருக்கிறார்.