இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அவர்களுக்கு ஆதரவாக லெபனான் நாடும் தாக்குதலில் ஈடுபட்டிருக்கிறது. லெபனான் நாட்டிலுள்ள ஹிஸ்புல்லா இயக்கத்தினர் இஸ்ரேலுக்கு எதிராக போரில் குதித்திருக்கிறார்கள்.
பாலஸ்தீனத்தின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான காஸா, தன்னாட்சி அதிகாரத்துடன் செயல்பட்டு வருகிறது. இஸ்ரேலை ஒட்டி அமைந்திருக்கும் இந்நகரம் ஹமாஸ் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. மேலும், பாலஸ்தீன இஸ்லாமிய ஜிகாத் தீவிரவாதிகளும் இங்கு அதிகளவில் வசித்து வருகின்றனர். இது தவிர, இஸ்ரேலியர்களும் இப்பகுதியில் வசிக்கின்றனர். எனினும், ஹமாஸ் மற்றும் பாலஸ்தீன இஸ்லாமிய ஜிகாத் தீவிரவாதிகல் இஸ்ரேல் நாட்டின் மீது அவ்வப்போது தீவிரவாத தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், ஹமாஸ் தீவிரவாதிகள் நேற்று காலை திடீரென இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில், 350 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். பதிலுக்கு இஸ்ரேலும் வான்வளித் தாக்குதலில் ஈடுபட்டது. இதில், 250-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். அதேபோல, இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கான மக்கள் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை அதிகரிகக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. மேலும், போர் தொடர்ந்து வருவதாலும் பலி அதிகரிக்கலாம் என்று கருதப்படுகிறது.
இந்த நிலையில்தான், காஸாவின் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது லெபனான் நாடு தாக்குதலில் ஈடுபட்டிருக்கிறது. வடக்கு இஸ்ரேலில், சிரியாவின் ஆக்கிரமிப்பான கோலன் குன்றுகள் மீதுள்ள 3 இஸ்ரேல் நிலைகள் மீது லெபனானின் ஹிஸ்புல்லா இயக்கம் ஏவுகணைகள் மற்றும் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி இருக்கிறது. லெபனானில் இருந்து ஏவப்பட்ட எவுகணைகளால் ஷெபா ஃபார்ம்ஸில் உள்ள இஸ்ரேலிய ராணுவ நிலைகள் சேதமடைந்தன.
இதுதொடர்பாக லெபனான் ஆயுதக் குழுவான ஹிஸ்புல்லா இயக்கத்தினர் கூறுகையில், “வடக்கு இஸ்ரேலில் குண்டு மற்றும் ஏவுகணை தாக்குதலை நடத்தினோம். ஆக்கிரமிக்கப்பட்ட லெபனான் ஷெபாபார்ம்ஸ் பகுதியில் உள்ள 3 இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு தளங்களை குறிவைத்து தாக்கினோம். பாலஸ்தீனத்துடன் ஒற்றுமையாக இருக்கிறோம்” என்று தெரிவித்தனர்.
லெபனானின் தாக்குதலையடுத்து இஸ்ரேலும் பதிலடித் தாக்குதல் நடத்தி வருகிறது. பீரங்கித் தாக்குதல் மூலம் பதிலடி கொடுத்து வருகிறது. இதுகுறித்து இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர் கூறுகையில், “இஸ்ரேல் எல்லைக்குள் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, லெபனானில் பீரங்கித் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகிறது” என்று தெரிவித்திருக்கிறது. மேலும், ஹிஸ்புல்லா இயக்கத்துக்கு தக்க பதிலடி கொடுக்கத் தயாராக இருப்பதாகவும் இஸ்ரேல் இராணுவம் தெரிவித்திருக்கிறது. மேலும், இஸ்ரேல் இராணுவம் லெபனான் பகுதிகளில் துப்பாக்கிச் சூடும் நடத்தி வருகிறது.
இதனிடையே, இஸ்ரேலுக்கு எதிராக போரிடுமாறு பாலஸ்தீன இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்திருக்கும் ஹமாஸ் அமைப்பினர், தங்களுக்கு ஆதரவு கொடுக்குமாறும் இஸ்லாமிய நாடுகளை கேட்டுக்கொண்டிருக்கின்றனர். இந்த சூழலில், ஹமாஸ் அமைப்பினரின் தாக்குலில் கம்போடிய மாணவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், தாய்லாந்தைச் சேர்ந்த 2 தொழிலாளர்கள் கடத்தப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.