இராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் வினோத திருவிழா நடைபெற்றது. இதில், ஏராளமான ஆண்கள் கலந்து கொண்டனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்து முதல் நாடு என்ற கிராமம் உள்ளது. இந்த ஊரில் அருள்மிகு எல்லைப் பிடாரி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது.
இங்கு ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் திருவிழா நடைபெறும். அப்போது, நூற்றுக்கணக்கான ஆட்டுக்கிடாய்கள் பலி கொடுப்பது வழக்கம். மேலும், கைக்குத்தல் அரிசியைக் கொண்டு சமைத்துப் படையலிட்டு வழிபாடு செய்து வருகின்றனர். குறிப்பாக, இந்த விழாவில், ஆண்கள் மட்டும் பங்கேற்பர். எக்காரணம் கொண்டும் பெண்களை அனுமதிப்பதில்லை.
இந்த நிலையில், இந்த வருடம், எல்லைப் பிடாரி அம்மன் திருக்கோவில் விழா நடைபெற்றது. திருவிழாவையொட்டி, 46 ஆடுக்கிடாய் பலி கொடுக்கப்பட்டது.
இந்த திருவிழாவில் ஆட்டுக்கிடாயை சுவாமிக்கு முன்னர் வைத்து பூஜை செய்து பலி கொடுத்தனர். பின்னர், அங்கேயே அதனை சமைத்து அதிகாலையில் நேரத்தில் ஆண்கள் மட்டுமே சாப்பிட்டனர். இந்த விருந்தில் சுற்றுவட்டார கிராமத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான ஆண்கள் பயபக்தியோடு கலந்துகொண்டனர்.