இராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருவதால் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டுள்ளது.
வறட்சி மாவட்டம் என்றாலும், இராமநாதபுரம் மாவட்டத்தில், ஆர்.எஸ்.மங்கலம், பாண்டுகுடி, சேந்தனேந்தல் உள்ளிட்ட ஒரு சில பகுதிகளிலும், கிராமங்களிலும் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், ஆர்.எஸ்.மங்கலம், பாண்டுகுடி, சேந்தனேந்தல் உள்ளிட்ட 20 -க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு இன்சூரன்ஸ் தொகை கிடைக்கவில்லை என விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக, இன்று காலை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் ஒன்று திரண்டு வந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இவ்வளவு பேர் திரண்டு வருவார்கள் என உளவுத்துறையினர் கணிக்கத் தவறியதால், கும்பலை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். இதனால், பக்கத்து மாவட்டங்களிலிருந்து கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
தற்போது, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், விவசாயிகள் – போலீசார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. இதனால், அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.