நாட்டில் பலதரப்பட்ட நாய் வகைகள் உள்ளதை பொது மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் நடத்தப்படும் கண்காட்சியே நாய் கண்காட்சியாகும்.
இந்த கண்காட்சி நாய்கள் மற்றும் நாய் வளர்ப்போரை ஊக்குவிக்கும் போட்டியாக நடத்தப்படுகிறது. மேலும், இந்த கண்காட்சி பல்வேறு வகை நாய்களின் வகைகளையும், அதன் உடலமைப்பு, செயல்திறன் மற்றும் மனோபாவங்களை அறிந்து கொள்ள உதவுகிறது.
இந்த நிலையில், மதுரை தமுக்கம் மைதானத்தில் கெனய்ன் விடுதி சார்பில் தேசிய அளவிலான நாய் கண்காட்சி நடைபெற்றது. இதில், மதுரை, கோவை, கொடைக்கானல், திருச்சி உள்படத் தமிழகம் மற்றும் தென்னிந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து 353 நாய்கள் பங்கேற்றன. கண்கவர் வண்ணதில் பங்கேற்ற நாய்களை பொது மக்கள் வியப்புடன் பார்த்து கைதட்டி மகிழ்ந்தனர்.
கண்காட்சியில் பங்கேற்ற சிப்பிப்பாறை, கோம்பை, கன்னி, ராஜபாளையம், கட்டக்கால் உள்ளிட்ட நாட்டின நாய்களுக்கு எனத் தனிப் பிரிவுகளில் கீழ் போட்டிகள் நடத்தப்பட்டன.
நடுவர்களாக ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். போட்டியில், நாய்களின் உடல் தகுதி, வயது, வளர்ச்சி, நிறம் மற்றும் பராமரிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பரிசுகளை வழங்கினர்.
போட்டியில் தேர்வு செய்யப்பட்ட சிறந்த நாய்களுக்குப் பரிசுகளும், கேடயங்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. சிறந்த நாட்டு நாய்களுக்கு 2 கிராம் தங்கம் ஊக்கப் பரிசாக வழங்கப்பட்டது.