ஹமாஸ் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், காஸாவிலுள்ள அத்தீவிரவாத அமைப்பின் தலைமையகத்தை இஸ்ரேல் விமானப்படை தூள்தூளாக்கி இருக்கிறது. மேலும், ஹமாஸ் தீவிரவாத அமைப்பின் தலைவர்கள் வீடுகளையும் இஸ்ரேல் விமானப்படை தரைமட்டமாக்கி இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இஸ்ரேல் மீது காஸாவின் ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த சனிக்கிழமை அறிவிக்கப்படாத போரில் ஈடுபட்டனர். வெறும் அரை மணி நேரத்தில் அந்நாட்டின் மீது 7,000 ஏவுகணைகளை செலுத்தினர். இத்தாக்குதலில் 700-க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர். இதனால் ஆத்திரமடைந்த இஸ்ரேல், பகிரங்கமாக போரை அறிவித்திருக்கிறது. இதையடுத்து, காஸா மீது ஏவுகணை மற்றும் வான் வழித் தாக்குதலில் ஈடுபட்டது. காஸாவின் முக்கியப் பகுதிகளில் குண்டு மழை பொழிந்தது.
குறிப்பாக, ஹமாஸ் தீவிரவாதி அமைப்பின் தலைமையகம், தீவிரவாத அமைப்பின் தலைவர்களின் வீடுகள் மற்றும் தீவிரவாதிகளின் முகாம்கள் ஆகியவற்றைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இத்தாக்குதலில் 800-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் பலியானதோடு, 3 மாடிகளைக் கொண்ட ஹமாஸ் தீவிரவாதிகளின் தலைமையகமும் தூள்தூளாகி இருக்கிறது. மேலும், ஹமாஸ் தீவிரவாதிகளின் முகாம்கள் மற்றும் தலைவர்களின் வீடுகளும் தரைமட்டமாகி இருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.
இதுகுறித்து இஸ்ரேல் விமானப்படை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “காஸாவில் 3 தளங்கள் கொண்ட ஹமாஸ் தீவிரவாதிகளின் தலைமையகத்தையும், மூத்த ஹமாஸ் கடற்படைத் தலைவர் முஹம்மது கஷ்தாவுடன் தொடர்புடைய தலைமையகத்தையும் இஸ்ரேல் விமானப்படை தாக்கி அழித்தது. மேலும், ஹமாஸ் தீவிரவாதிகள் தங்களது திட்டங்களை செயல்படுத்துவதற்காக பயன்படுத்தி வந்த, ஜபலியா பகுதியில் உள்ள மசூதியின் மையப்பகுதியில் இருந்த முகாமையும் இஸ்ரேல் விமானப்படை குண்டு வீசி அழித்தது” என்று தெரிவித்திருக்கிறது.