பள்ளிக்கரணை சதுப்பு நிலம் பகுதிக்கு வரும் பறவைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
பள்ளிக்கரணை சதுப்பு நிலம் வேளச்சேரி – மேடவாக்கம் வரை பரவியுள்ளது. நகர்ப்புற வளர்ச்சி, ஆக்கிரமிப்பு, கட்டுமான திட்டங்களால் ஏற்படும் பாதிப்பு ஆகியவற்றுக்கு இடையே, இப்பகுதி பாதுகாக்கப்பட்ட இடமாக வனத்துறையால் பராமரிக்கப்பட்டு வருகிறது. வழக்கமாக பள்ளிக்கரணை சதுப்பு நிலப் பகுதிக்கு வெளிநாட்டுப் பறவைகள் வருகை தரும் வலசை ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் பிற்பகுதியில் தொடங்கும்.
இந்த நிலையில், அக்டோபர் மாதம் தொடக்கத்திலேயே சாம்பல்தலை, மஞ்சள் வால் பறவை, நீலச்சிறகு வாத்து, தட்டைவாயன் உள்ளிட்ட அரிய வகை பறவைகள் வரத்தொடங்கி இருக்கிறது. வரும் நாட்களில் வெளிநாடுகளில் இருந்து வரும் பறவைகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை இவை வந்து செல்லும்.
வடகிழக்கு பருவமழை தொடங்க சில வாரங்கள் இருக்கும் நிலையில், பள்ளிக்கரணையில் பறவைகள் வருகை அதிகரித்து இருப்பது ஆர்வலர்களை ஈர்த்துள்ளது.
கடந்த 2022-ஆம் ஆண்டு அக்டோபர் நிலவரப்படி, 190 வகை பறவைகள் வந்து சென்றது கணக்கெடுப்பு வாயிலாக ஆவணம் செய்யப்பட்டுள்ளது. இதில், 72 வகை பறவைகள் வெளி நாடுகளிலிருந்து இங்கு வந்து செல்கின்றன. இதன் மூலம் அதிகபட்சமாக ஆண்டுக்கு, 41,000 பறவைகள் வந்து செல்வது உறுதியாகியுள்ளது.